அரசு அதிகாரிகளின் ஒழுங்கு நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரசு அதிகாரிகளின் ஒழுங்கு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளில் நிலவும் தாமதம் மற்றும் மெத்தனப் போக்கைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் பணிபுரியும் அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், அவற்றின் தற்போதைய நிலை மற்றும் இதுவரை எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற நிதி முறைகேடு வழக்கு கருதப்படுகிறது. ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக 2017 முதல் 2023-ஆம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட ரூ.2.35 கோடி நிதியை அரசு அதிகாரிகள் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சுதந்திர தொழிலாளர் கட்சியின் மாநிலத் தலைவர் ஏ.சக்திவேல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சிபி-சிஐடி விசாரணை தேவை என வலியுறுத்தினார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டிருந்தும், சுமார் 20 மாதங்களைக் கடந்தும் இதுவரை விசாரணை அதிகாரி நியமிக்கப்படாததை நீதிபதிகள் கடுமையாகச் சாடினர். இது தொடர்பாக விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டதற்கான அரசு ஆணை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதிதான் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும், துறை ரீதியான விசாரணை ஏன் இவ்வளவு தாமதமானது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இறுதியாக, சம்பந்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி ஏற்கனவே பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த ஒட்டுமொத்த முறைகேடு விவகாரம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அரசுத் துறைகளில் நிலுவையில் இருக்கும் ஒழுங்கு நடவடிக்கை குறித்த முழுமையான விவரங்களை அறிக்கையாகச் சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைத்த நீதிபதிகள், நிர்வாகக் குளறுபடிகள் குறித்து தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.









