கோயம்புத்தூர் ஆனைக்கட்டி: அனுமதியின்றி செயல்படும் 8 சொகுசு விடுதிகளை மூட உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் 8 சொகுசு விடுதிகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் செயல்பட்டு வரும் எட்டு சொகுசு விடுதிகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய திட்ட அனுமதி மற்றும் தேவையான உரிமங்கள் இல்லாமல் செயல்பட்டு வரும் இந்த விடுதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி, எஸ்.ஆர். ஜங்கிள் ரிசார்ட், கார்னிச் இன், டால்பின்ஸ் ரிசார்ட் அண்ட் ரெஸ்டாரண்ட், கே.கே. செல்ஃபி பாயிண்ட், ஃபார்ம் ரீட்ரீட், ஃபயர் பிளை ரிசார்ட், பாரத் ஹாலிடேஸ் ரிசார்ட் மற்றும் ஜிமேக்ஸ் ரிசார்ட் அண்ட் ரெஸ்டாரண்ட் ஆகிய எட்டு விடுதிகள் திட்ட அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதைக் கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், எண் 24 வீரபாண்டி கிராமத்தில் உள்ள மை வில்லேஜ் ஈக்கோ டூரிஸ்ட் ரிசார்ட் மற்றும் நஞ்சுண்டாபுரத்தில் உள்ள தர்ஸா ரிசார்ட் ஆகிய விடுதிகளுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் வழங்கிய அனுமதிகளை சரிபார்க்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் பணித்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு, கோயம்புத்தூர் வடக்கு வட்டாட்சியர், பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வனத்துறை ரேஞ்ச் அதிகாரி ஆகியோருடன் இணைந்து இந்த விடுதிகள் குறித்த கள ஆய்வுகளை மேற்கொண்டு, ஏதேனும் விதிமீறல்கள் அல்லது முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 18-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. மேலும், இப்பகுதியில் அனுமதி பெறாமல் செயல்படும் பிற விடுதிகள் ஏதேனும் உள்ளனவா என்பதைக் கண்டறிந்து, அவை மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை தொடர்ந்த சென்னைச் சேர்ந்த சமூக ஆர்வலர் என். முரளிதரன், ஆனைக்கட்டி பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட விடுதிகள் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருவதாகவும், அவை யானைகள் வழித்தடங்களைப் பாதிக்கின்றன என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டார். ஆனால், அதிகாரிகள் 10 விடுதிகளை மட்டுமே அடையாளம் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகாரத்தில் உள்ளவர்களின் பின்னணியால் சில விடுதிகள் மறைக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் இன்னும் ஆட்சியரிடமிருந்து அதிகாரப்பூர்வமான உத்தரவுகளைப் பெறவில்லை என்று கூறியுள்ள நிலையில், அடுத்தகட்ட விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.









