dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

நீலகிரி யானை வழித்தடம்: ஆக்கிரமிப்பு விடுதிகளை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Admin
05/11/2026
90 views
நீலகிரி யானை வழித்தடம்: ஆக்கிரமிப்பு விடுதிகளை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நீலகிரி யானை வழித்தடத்தில் அனுமதியின்றி செயல்படும் மேலும் 5 விடுதிகளை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சிங்காரா பீடபூமி பகுதிகளில் அமைந்துள்ள யானை வழித்தடங்களைப் பாதுகாப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. குறிப்பாக, உரிமையாளர்கள் தங்களது தரப்பு விளக்கத்தை பிரமாணப் பத்திரம் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தவறியதால், அங்குள்ள மேலும் ஐந்து விடுதிகளை உடனடியாக இடிப்பதற்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.லிங்கேஸ்வரன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையின்படி, யானை வழித்தடத்திற்குள் கண்டறியப்பட்ட முப்பத்தெட்டு விடுதிகள் ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு விடுதிகள் முழுமையாகவும், மேலும் நான்கு விடுதிகள் பகுதியாகவும் இடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள விடுதிகளில் இருபத்தைந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த விடுதிகள் குறித்து வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, வணிக ரீதியான செயல்பாடுகள் இன்னும் நடைபெறுகிறதா என்பதை உறுதிப்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆய்வு குறித்த விரிவான அறிக்கையை வரும் டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்தகட்ட விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் யானை வழித்தடத்தை பாதுகாப்பதற்கான அரசின் முன்னெடுப்புகளை நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. இதன்படி, அரசுக்குச் சொந்தமான சுமார் 424.45 ஏக்கர் நிலங்கள் வனப்பகுதியாக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே 35.44 ஏக்கர் நிலங்கள் வனப்பகுதியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த கூடுதல் நிலங்களை வனத்துறை ஆவணங்களில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு வனச்சட்டத்தின் நான்காவது பிரிவின் கீழ் சுமார் 107.91 ஏக்கர் நிலத்தை வனப்பகுதியாக அறிவிக்க முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. நில வருவாய் ஆவணங்களில் முறையான மாற்றங்களைச் செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

யானை வழித்தடத்திற்கு அருகில் உள்ள வருவாய் நிலங்களின் தன்மை மற்றும் பரப்பளவு குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கென மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய் அலுவலர், கூடலூர் ஜன்மம் நிலங்கள் செட்டில்மென்ட் அதிகாரி மற்றும் மசினகுடி முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆகியோர் அடங்கிய கூட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நீர்நிலைகள் மற்றும் ஓடைப் பகுதிகளை ஒட்டியுள்ள நிலங்களை முன்னுரிமை அடிப்படையில் ஆய்வு செய்து, அவற்றை கையகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#நீலகிரி
#யானைவழித்தடம்
#சென்னைஉயர்நீதிமன்றம்
#முதுமலை
#வனப்பாதுகாப்பு
#Nilgiris
#ElephantCorridor
#MadrasHighCourt
#Mudumalai
#ForestConservation
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications