எச்.ஐ.வி பாதித்த பெண்ணுக்கு மாத உதவித்தொகை வழங்க உத்தரவு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு

சாத்தூர் அரசு மருத்துவமனையில் தவறான இரத்த மாற்றத்தால் எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு நிலுவையில் உள்ள உதவித்தொகையை வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, தவறான இரத்த மாற்றத்தின் காரணமாக எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளான பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டிய மாத உதவித்தொகையை உடனடியாக வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாள்தோறும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதால், அவருக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் முன்பே உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தமிழ்நாடு மாநில எச்.ஐ.வி கட்டுப்பாட்டு சங்கத்தின் (TANSACS) சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டதாகவும், அதன்பிறகு நிதி பற்றாக்குறை காரணமாக அது நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையாக உதவித்தொகை வழங்குவது அரசு செய்ய வேண்டிய மிக அடிப்படையான கடமை என்பதை வலியுறுத்தினர். அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட கவனக்குறைவால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் எதிர்காலத்தையும், அவரது உடல்நலத் தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. உதவித்தொகையை நிறுத்தியது ஏற்புடையது அல்ல என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள அனைத்து மாத உதவித்தொகைகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாநில எச்.ஐ.வி கட்டுப்பாட்டு சங்கத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்தகட்ட விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.









