dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவில்: சேதமடைந்த அஷ்ட திக் பாலகர் சிலைகளை மாற்ற உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Admin
30/09/2026
66 views
தஞ்சை பெரிய கோவில்: சேதமடைந்த அஷ்ட திக் பாலகர் சிலைகளை மாற்ற உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தஞ்சை பெரிய கோவிலில் சேதமடைந்த மற்றும் காணாமல் போன அஷ்ட திக் பாலகர் சிலைகளை ஓராண்டுக்குள் மாற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் (பெரிய கோவில்) காலங்காலமாக வழிபாட்டில் உள்ள அஷ்ட திக் பாலகர் சிலைகளில் சேதமடைந்த மற்றும் காணாமல் போன சிலைகளை உடனடியாக மாற்றி அமைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பான பொதுநல வழக்குகளை விசாரித்து இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கோவிலின் புனிதத்தன்மையைக் காக்கும் நோக்கில், இந்த சிலைகளை நிறுவவும் மாற்றவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவிலின் பழமை மற்றும் பெருமையை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சோழ மன்னன் ராஜராஜ சோழனால் மிகுந்த பக்தியுடன் கட்டப்பட்ட இந்த ஆலயம், போதிய பராமரிப்பு மற்றும் சிலைகள் இல்லாத காரணத்தால் உரிய மரியாதையுடன் பாதுகாக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்தனர். குறிப்பாக, அஷ்ட திக் பாலகர்களில் நான்கு சிலைகள் காணாமல் போயுள்ளதாகவும், மற்ற நான்கு சிலைகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திரத்திற்கு முன்பே இந்த சிலைகள் காணாமல் போன நிலையில், இது குறித்து எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் சட்டத்தின் கீழ், சிலைகளை மாற்றுவதற்கு அனுமதி இல்லை என தொல்லியல் துறை முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்தது. இந்த சட்டம் சிலைகளை அழிப்பதையோ அல்லது சேதப்படுத்துவதையோ மட்டுமே தடை செய்கிறது என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள், பெரிய கோவில் ஒரு உயிருள்ள வழிபாட்டுத் தலமாக இருப்பதால், உடைந்த சிலைகளை அப்படியே வைத்திருக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். மேலும், உடைந்த சிலைகளை இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் அனுமதி அளித்துள்ளனர்.

இந்த உத்தரவை செயல்படுத்துவதற்காக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மற்றும் திருச்சி மண்டல தொல்லியல் துறை உதவி கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதன்படி, அக்னி, வருணன், வாயு மற்றும் ஈசானர் ஆகிய திசைகளில் சேதமடைந்த சிலைகளை மாற்றுவதற்கும், இந்திரன், எமன், நிருதி மற்றும் குபேரன் ஆகிய திசைகளில் புதிய சிலைகளை நிறுவுவதற்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆரம்பகட்ட பணிகளை மூன்று மாதங்களுக்குள் தொடங்கி, மொத்தப் பணிகளையும் ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தஞ்சாவூர்
#பெரியகோவில்
#உயர்நீதிமன்றம்
#கோவில்சிற்பங்கள்
#தமிழகஅரசு
#ThanjavurTemple
#MadrasHighCourt
#BigTemple
#TempleIdols
#TamilNaduNews
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications