பொதுச் சாலைகளில் கால்நடை தொல்லை: பறிமுதல் செய்து ஏலம் விட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பறிமுதல் செய்து, உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளாத பட்சத்தில் ஏலம் விட சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பொதுச் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடை தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, திருவேற்காட்டைச் சேர்ந்த எம். காமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது இந்தத் தீர்ப்பை வழங்கியது. பொது இடங்களில் திரியும் கால்நடைகளை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், உரிய காலத்திற்குள் உரிமையாளர்கள் அவற்றை மீட்கத் தவறினால், அந்த விலங்குகளை ஏலம் விட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி, 1997-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் பிரிவு 3-ஐ அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும். இதன்படி, நகராட்சி எல்லைக்குள் கால்நடை வளர்க்கும் உரிமையாளர்கள் அனைவரும் முறையான உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடை வளர்ப்போர் தங்கள் கொட்டகைகளில் சுகாதாரத்தை உறுதி செய்வதுடன், கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், ஒவ்வொரு கால்நடைக்கும் அடையாளக் குறியீடுகளை (tagging) பொருத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கால்நடைகளைப் பறிமுதல் செய்யும் பணிக்காக பிரத்யேகக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இந்த நடவடிக்கையின்போது மாநகராட்சி அல்லது நகராட்சி பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பை காவல்துறையினர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கைப்பற்றப்படும் கால்நடைகளை எவ்வித பாரபட்சமும் இன்றிப் பராமரிக்க வேண்டும் என்றும், 2022-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, தினசரி பராமரிப்பு மற்றும் தீவனச் செலவுக்கான கட்டணங்கள் மற்றும் அபராதங்களைத் தவறாமல் வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிமையாளர்கள் முன்வந்து, உரிய கட்டணங்களைச் செலுத்தித் தங்கள் கால்நடைகளை மீட்கத் தவறினால், அத்தகைய விலங்குகளை ஏலம் விடுவதற்கோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட கோசாலைகளில் ஒப்படைப்பதற்கோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவைச் செயல்படுத்துவது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர், கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோர் நான்கு வாரங்களுக்குள் உரிய சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









