பாலஸ்தீன ஆதரவு போராட்டம்: 14 பேர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாலஸ்தீன ஆதரவு போராட்டத்திற்காக 14 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிராக நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது, இஸ்ரேலுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாகவும், சட்டவிரோதமாகக் கூடியதாகவும் கூறி, பி.பி. முகமது உள்ளிட்ட 14 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் சட்டவிரோதக் கூட்டம் மற்றும் தவறான முறையில் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டு, கூடலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பி.பி. முகமது உள்ளிட்ட 14 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில், மனுதாரர்கள் தரப்பில் தாங்கள் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும், அமைதியான முறையில் ஜனநாயக ரீதியாகவே போராட்டம் நடத்தப்பட்டதாகவும் வாதிடப்பட்டது. அதேசமயம், அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கில் விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், 14 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார். சட்டம் வரையறுத்துள்ள சட்டவிரோதக் கூடல் என்பதற்கான எந்தவொரு முகாந்திரமும் இந்த வழக்கில் இல்லை என்பதை நீதிபதி தெளிவுபடுத்தினார். எவ்விதமான வன்முறைக்கும் அல்லது குற்றச் செயலுக்கும் அந்தப் போராட்டக் குழுவினர் முயலவில்லை என்றும், பிறரது சொத்துக்களுக்கோ அல்லது உரிமைகளுக்கோ எந்தவித பாதிப்பையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த தவறான முறையில் தடுத்தல் தொடர்பான சட்டப்பிரிவுகளும், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் வலுவான காரணங்கள் இன்றி இருப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். சட்டப்படி ஒரு கூட்டம் சட்டவிரோதமானது என்று கருதப்படுவதற்குத் தேவையான கூறுகள் ஏதுமின்றி, போராட்டக்காரர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தீர்ப்பின் மூலம் 14 பேர் மீதான குற்றச்சாட்டுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.









