உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கைத் தள்ளுபடி செய்ய கோரிய உதயநிதி ஸ்டாலினின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினின் வெற்றியைச் சவாலுக்கு உள்ளாக்கித் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜி. அருள் முருகன், உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நிராகரிப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பி. மிலானி என்பவர், இந்தத் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முன்னாள் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலினை, தேர்தல் மனுவிற்குப் பதிலளிக்கும் வகையில் விரிவான பதில் மனுவைத் (Counter-affidavit) தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கின் விசாரணையின் போது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தல் மனு தாக்கல் செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட 45 நாட்கள் என்ற காலக்கெடுவிற்குப் பிறகே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கோரப்பட்டிருந்தது. இருப்பினும், மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உரிய காலத்திற்குள் தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், நீதிமன்றப் பதிவாளர் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய முடியாது என்றும் வாதிடப்பட்டது.
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 62,992 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த டி. செல்வம் 55,852 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். சுயேச்சையாகப் போட்டியிட்ட மனுதாரர் மிலானி, இந்தத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, இந்த தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.









