பிளாஸ்டிக் பாட்டில்களில் மைக்ரோபிளாஸ்டிக் எச்சரிக்கை: உணவு பாதுகாப்புத் துறையின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

பிளாஸ்டிக் பாட்டில்களில் மைக்ரோபிளாஸ்டிக் எச்சரிக்கை லேபிள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் மைக்ரோபிளாஸ்டிக் குறித்த எச்சரிக்கை லேபிள்களைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற தனது முந்தைய உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, பிளாஸ்டிக் துகள்கள் மனித உடலின் பாதுகாப்பு அரண்களைத் தாண்டி இரத்த ஓட்டத்தில் கலந்து, முக்கிய உறுப்புகளைச் சென்றடையும் அபாயம் குறித்து தீவிர கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த நுண் துகள்கள் நஞ்சுக்கொடியைக் கடந்து கருவைச் சென்றடைவது மிகுந்த ஆபத்தானது என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 6, 2026 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, நீர் பாட்டில்கள், சர்க்கரை மற்றும் உப்பு பாக்கெட்டுகளில் மைக்ரோ அல்லது நானோ பிளாஸ்டிக் இருப்பு குறித்த எச்சரிக்கை லேபிள் கட்டாயம் இருக்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. இதனை எதிர்த்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மற்றும் பேக்கேஜிங் சங்கங்கள் தாக்கல் செய்த மனுக்களையே நீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது. உடலில் நுழையும் இந்த பிளாஸ்டிக் துகள்கள் செரிமானம், இதயம், சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க மண்டலங்களைத் தீவிரமாக பாதிக்கும் என்பதை பல்வேறு சர்வதேச ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 16 மற்றும் 18-ன் கீழ், பொதுமக்களின் உடல்நலத்திற்கு ஆபத்தான விஷயங்கள் குறித்துத் தெரிவிக்க வேண்டியது உணவு பாதுகாப்பு ஆணையத்தின் கடமையாகும் என்று நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியும், இது குறித்து உரிய விதிகளை உருவாக்கத் தவறியதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். நுகர்வோருக்குத் தாங்கள் வாங்கும் பொருளின் தரம் மற்றும் ஆபத்து குறித்துத் தெரிந்துகொள்ளும் 'தகவல் சார்ந்த உரிமை' (Informed choice) இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மைக்ரோபிளாஸ்டிக் பாதிப்பு குறித்து நாளிதழ்களில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளையும் நீதிமன்றம் மேற்கோள் காட்டியது.
நாட்டில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு ஆண்டுதோறும் 12 முதல் 14 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. 2024-25 நிதியாண்டில் மட்டும் சுமார் 1.90 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள் நுகரப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடாமல், நமது நாட்டின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு மக்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். நுகர்வோர் விழிப்புணர்வுடன் முடிவெடுப்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இது குறித்த ஆய்வுகள் தொடரும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.









