dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

முதல்வர் குறித்த சமூக வலைதள பதிவு: ஜாமீன் மறுக்கப்பட்டவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்

By K. ராதாகிருஷ்ணன்
151 views
முதல்வர் குறித்து அவதூறு பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி கீழ் நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

முதல்வர் குறித்து அவதூறு பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி கீழ் நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

முதல்வர் சி.ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கைது செய்யப்பட்ட நபருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. திருவான்மியூரைச் சேர்ந்த பி.ராஜகோபால் என்பவர், சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜூன் 12, 2026 அன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாகக் கூறி, ஜூன் 25 அன்று அவர் மீது பி.என்.எஸ் சட்டம் பிரிவு 296 (பி) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 22 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, சைதாப்பேட்டை பதினொன்றாவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆகியவை தொடர்ந்து நிராகரித்தன. வழக்கின் தன்மை மற்றும் விசாரணை நடைபெற்று வருவதைக் காரணம் காட்டி மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ரமேஷ், கீழ் நீதிமன்றங்களின் செயல்பாட்டைச் சாடினார். சட்டப்படி பிணை வழங்கப்பட வேண்டிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தும், அந்த நபர் மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறையில் இருந்ததை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற உத்தரவில், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட நாளிலேயே ஜாமீன் பெற உரிமையுடையவர் என்று நீதிபதி என்.ரமேஷ் தெளிவுபடுத்தினார். பி.என்.எஸ்.எஸ் பிரிவு 478(1)-ன் படி, பிணை வழங்கக்கூடிய குற்றங்களுக்குக் குற்றம் சாட்டப்பட்டவர் பிணை பத்திரம் வழங்கத் தயாராக இருந்தால், அவருக்கு பிணை மறுக்க காவல்துறைக்கோ அல்லது நீதிமன்றங்களுக்கோ எந்த அதிகாரமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். கீழ் நீதிமன்றங்கள் மற்றும் நடுவர்கள் பிணையில் வரக்கூடிய குற்றமா என்பதைச் சரிபார்க்காமல் சிறைக் காவலுக்கு உத்தரவிடக் கூடாது என்று அவர் கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.

இந்த வழக்கில் விசாரணை நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டி பிணை மறுக்கப்படக்கூடாது என நீதிபதி வலியுறுத்தினார். இதன்படி, மனுதாரருக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், அவர் 25,000 ரூபாய்க்கான பிணை பத்திரத்தை இரு நபர் உத்தரவாதத்துடன் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விசாரணை அதிகாரி அழைக்கும் போதெல்லாம் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு சட்ட நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு கீழ் நீதிமன்றங்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#சென்னை உயர் நீதிமன்றம்
#முதல்வர்
#சைபர் கிரைம்
#ஜாமீன்
#சட்ட நடவடிக்கை
#Madras High Court
#Chief Minister
#Cyber Crime
#Bail Order
#Legal News
#Dhinaanjal
#தினஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications