மதுரையில் காவல் மரணம் தொடர்பான குற்றச்சாட்டு: உண்மை நிலையை விளக்கும் காவல்துறை

மதுரையில் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்த விவகாரத்தில், போலீஸார் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறை மறுத்துள்ளது.
மதுரை மெல் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பரமசிவம் என்பவர், தலைக்காயம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி அவர் உயிரிழந்த நிலையில், தனது கணவரின் இறப்புக்கு போலீஸாரின் தாக்குதலே காரணம் என அவரது மனைவி அய்யம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாநகர காவல்துறை தற்போது விரிவான விளக்கத்தை அளித்துள்ளது.
காவல்துறையின் அறிக்கையின்படி, கடந்த ஜூலை 17-ஆம் தேதி வாகன நிறுத்துமிடம் தொடர்பாக பரமசிவத்திற்கும், அவரது அண்டை வீட்டார்களான மாலதி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இரு தரப்பினரும் காயமடைந்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜூலை 23-ஆம் தேதி பரமசிவம், அவரது மனைவி அய்யம்மாள், மகன் மற்றும் அண்டை வீட்டார் என அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
தங்கள் மீதான தாக்குதல் புகாரை மறுத்துள்ள காவல்துறை, ஜூலை 24-ஆம் தேதி பரமசிவம் தனது வீட்டில் தவறி விழுந்ததாகவும், அதன் காரணமாகவே அவருக்குத் தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக, ஆகஸ்ட் 5-ஆம் தேதி அவர் மீண்டும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, காவல்துறை விசாரணையின் போது, தான் தவறி விழுந்ததாக பரமசிவம் வாக்குமூலம் அளித்ததாகவும், அதை தலைமை காவலர் காவல் நிலைய பொது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரமசிவத்திற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், அவர் அதனை மறுத்துவிட்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி அங்கிருந்து வெளியேறியுள்ளார். பின்னர் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அரை மயக்க நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி அவரது மனைவி அய்யம்மாள் போலீஸார் மீது புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல் நிலைய ஆணை 151-இன் கீழ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தற்போது, மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவுப்படி, நீதித்துறை நடுவர் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருவதுடன், மருத்துவக் குழுவினர் மூலம் பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.









