மதுரையில் காவல் விசாரணைக்கு சென்ற நபர் மரணம்: குடும்பத்தினர் பகீர் புகார் மற்றும் காவல்துறை விளக்கம்

மதுரையில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்த விவகாரத்தில் குடும்பத்தினர் காவல் துறையினர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரையில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 52 வயதுடைய நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரே உயிரிழந்தவர் ஆவார். இவருடைய மரணத்திற்கு காவல் துறையின் தாக்குதலே காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற ஒரு தகராறு தொடர்பாக காவல் நிலையம் சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவரின் மனைவி அய்யம்மாள் இதுகுறித்து தெரிவிக்கையில், தங்களது பகுதியில் வாகன நிறுத்தம் தொடர்பாக அக்கம் பக்கத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஜூலை 17-ம் தேதி சிந்தாமணி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போது காவல் துறையினர் தங்களை மிரட்டியதால் புகாரைத் திரும்பப் பெற்றதாகக் கூறிய அவர், அடுத்த நாள் மீண்டும் விசாரணைக்கு வருமாறு காவல் துறையினர் வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் தாங்கள் செல்லாததால், ஜூலை 19-ம் தேதி காவல் துறையினர் நேரில் வந்து தங்களை வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல் நிலையத்தில் பரமசிவம் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், அதனால் அவருக்குத் தலைவலி உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம், மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்துள்ளார். காவல் துறையின் மிரட்டலுக்குப் பயந்துதான் தாங்கள் முன்பே புகார் அளிக்கவில்லை என்றும், தற்போது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மரணம் குறித்து அவரது மனைவி காவல் துறையில் முறைப்படி புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையில், பரமசிவத்தின் உயிரிழப்பு குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். காவல் துறையினர் அவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக தங்களிடம் சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக இருப்பதாகவும், அவர் நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவினால் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அவர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் விளக்கமளித்தார். தற்போது, இந்த விவகாரம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் (RDO) விசாரணை நடத்தி வருவதாகவும், அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடைபெற இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









