மதுரையில் அதிர்ச்சி: சைபர் மோசடி பணத்தை அமெரிக்க டாலர்களாக மாற்றிய கும்பல் கைது

மதுரையில் சைபர் மோசடி பணத்தை அமெரிக்க டாலர்களாக மாற்றிய 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 77 ஏடிஎம் கார்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் சைபர் மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை அமெரிக்க டாலர்களாக மாற்றி, வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளுக்கு அனுப்பும் மோசடி கும்பலை மாவட்ட காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் பரஸ்கான் (23), ஹபீப் முகமது (21) மற்றும் முகமது முபாரக் (23) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் காவல் துறையினரின் ரோந்து பணியின் போது சிக்கியதை அடுத்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விசாரணையில், இந்த கும்பல் சைபர் மோசடி மூலம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தை, அப்பாவி மக்களின் வங்கி கணக்குகளைப் பயன்படுத்தி பெற்று, பின்னர் அவற்றை அமெரிக்க டாலர்களாக மாற்றி அனுப்பியது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளிடமிருந்து 26 வங்கி கணக்கு புத்தகங்கள், 18 கைபேசிகள், 77 ஏடிஎம் கார்டுகள், 18 காசோலை புத்தகங்கள் மற்றும் 60 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களின் எண்ணிக்கை, இவர்கள் மிகப்பெரிய அளவில் வங்கி கணக்குகள் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகளைப் பயன்படுத்தி இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளதை உறுதிப்படுத்துகிறது.
கைது செய்யப்பட்ட பரஸ்கான், விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பு முடித்தவர் என்றும், எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இந்த மோசடி வலையில் சிக்கியதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் நாகமலை புதுக்கோட்டையில் வாடகை வீடு எடுத்து இந்த நெட்வொர்க்கை இயக்கி வந்துள்ளனர். ஒவ்வொரு ஒரு லட்சம் ரூபாய் பணத்தை ஆயிரம் அமெரிக்க டாலர்களாக மாற்றும்போதும் இவர்களுக்கு 6,300 ரூபாய் கமிஷனாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் இவர்கள் சுமார் 10 லட்சம் ரூபாய் கமிஷன் தொகையாக ஈட்டியிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
பொதுமக்களின் வங்கி கணக்குகளை வாடகைக்கு விடுவதோ அல்லது சிம் கார்டுகளை கமிஷனுக்காக வழங்குவதோ சட்டப்படி குற்றம் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தேசிய சைபர் குற்ற உதவி மையத்தின் 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவோ அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவோ அறிவுறுத்தப்படுகிறார்கள். காவல்துறை இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து, மோசடி நெட்வொர்க்கின் மற்ற தொடர்புகளைத் தேடி வருகிறது.









