மதுரையில் அமைகிறது பிரம்மாண்ட புற்றுநோய் சிகிச்சை மையம்: மாநகராட்சி நிலம் மாற்றம் செய்ய கவுன்சில் அனுமதி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் புதிய புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க மாநகராட்சிக்கு சொந்தமான 86 சென்ட் நிலம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான ஒருங்கிணைந்த பிராந்திய சிகிச்சை மையம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை அமைப்பதற்காக, மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான 86 சென்ட் நிலத்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்க மாநகராட்சி மன்றம் அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது. இந்த நிலப்பரப்பு மதுரை வடக்கு வட்டத்தில் உள்ள 10-வது வார்டில் அமைந்துள்ளது. சுமார் 37,458 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த இடம், முன்பு மாநகராட்சிக்குச் சொந்தமான அண்ணா பேருந்து நிலைய வளாகத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
மாவட்ட நிர்வாகம் இந்த நிலத்தை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்ற மாநகராட்சியிடம் தடையில்லாச் சான்றிதழை கோரியிருந்தது. முன்னதாக, மாநகராட்சிக்குச் சொந்தமான நிலங்கள் மருத்துவமனை பயன்பாட்டிற்காக மாற்றப்பட்டபோது, தணிக்கை தொடர்பான ஆட்சேபனைகள் எழுந்தன. எனவே, தற்போது மாற்றப்படும் நிலத்தின் மதிப்பை சந்தை நிலவரப்படி கணக்கிட்டு, அந்த தொகையை மாநகராட்சியின் நிலுவைத் தொகையுடன் ஈடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், நிலத்தின் மதிப்பு சுமார் 86.74 கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நில மதிப்பீட்டுத் தொகையை, அரசின் பல்வேறு திட்டங்களான ஏடிபி (ADP), கேஎப்வி (KfW) மற்றும் ஜேஎன்என்யுஆர்எம் (JnNURM) ஆகியவற்றின் கீழ் மதுரை மாநகராட்சி அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைக் கடன் தொகையுடன் சரிசெய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியிட்ட அரசாணையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நிலத்தை மருத்துவமனைக்கு மாற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
மாநகராட்சி மன்றத்தின் இந்த தற்போதைய ஒப்புதலையடுத்து, நிலத்தை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சட்டப்பூர்வமாக மாற்றும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது. இந்த புதிய புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் தீவிர சிகிச்சை மையம் அமையவுள்ளதன் மூலம், தென் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான நோயாளிகள் நவீன மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. மருத்துவக் கட்டமைப்பு மேம்பாட்டில் இது மிக முக்கியமான ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.









