dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

மதுரை அருகே அரசு நிலத்தில் முறைகேடு: குவாரி உரிமையாளருக்கு ரூ.7.48 கோடி அபராதம் விதிப்பு

By Admin
24/09/2026
74 views
மதுரை அருகே அரசு நிலத்தில் முறைகேடு: குவாரி உரிமையாளருக்கு ரூ.7.48 கோடி அபராதம் விதிப்பு

மதுரை அருகே அரசு நிலத்தில் சட்டவிரோதமாகக் கல் மற்றும் ஜல்லி கற்களை வெட்டிய குவாரி உரிமையாளருக்கு 7.48 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட நிலையூர் பிட்-2 பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல் குவாரி உரிமையாளர் மீது, அரசு நிலத்தில் அனுமதியின்றி கற்கள் மற்றும் ஜல்லிகளை வெட்டி எடுத்ததாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளருக்கு மொத்தம் 7 கோடியே 48 லட்சத்து 80 ஆயிரத்து 927 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக வருவாய்க் கோட்டாட்சியர் (RDO) உத்தரவிட்டுள்ளார். இந்த அபராதத் தொகையானது, கனிம வளங்கள் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதற்காக அபராதம், செக்ரேஜ் கட்டணம், மாவட்ட கனிம அறக்கட்டளை பங்களிப்பு, பசுமை நிதி பங்களிப்பு மற்றும் வருமான வரி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கணக்கிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2021-ம் ஆண்டு மே 6-ம் தேதி வழங்கிய உத்தரவின் அடிப்படையில், இந்தப்பகுதியில் முறையற்ற கல் குவாரி தொழில் நடைபெறுவது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, உச்சநீதிமன்றமும் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த விவகாரத்தில் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. இதன்பேரில், ஆகஸ்ட் 5-ம் தேதி தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் நவீன ட்ரோன், லைடார் (LIDAR), சோனார் மற்றும் பாத்திமெட்ரிக் ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நில அளவீடு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 54,084.02 கன மீட்டர் கல் மற்றும் 23,689.42 கன மீட்டர் ஜல்லி வெட்டி எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

மேலும், அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் (சர்வே எண்: 23/2) எவ்வித அனுமதியும் இன்றி 67,582 கன மீட்டர் கல் மற்றும் 5,581.35 கன மீட்டர் ஜல்லி வெட்டி எடுக்கப்பட்டதும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வறிக்கைகள் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வழங்கிய அறிக்கைகளைத் துல்லியமாக ஆய்வு செய்த பின்னரே வருவாய்க் கோட்டாட்சியர் இந்த அபராதத்தை விதித்து உத்தரவிட்டார். திருப்பரங்குன்றம் வட்டாட்சியர், இந்த அபராதத் தொகையை சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமிருந்து வசூலித்து அரசு கணக்கில் சேர்க்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள குவாரி உரிமையாளர், அரசு புறம்போக்கு நிலத்தில் தாங்கள் எந்தவித சுரங்கப் பணியையும் மேற்கொள்ளவில்லை என்றும், உரிய அனுமதியுடன்தான் குவாரி செயல்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற்ற விசாரணையில் வாதிட்டார். இதற்கிடையில், இந்த உத்தரவில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர் 30 நாட்களுக்குள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்று வருவாய்க் கோட்டாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாரி உரிமையாளர் தற்போது தவெக (TVK) கட்சியில் பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#மதுரை
#குவாரிமுறைகேடு
#அபராதம்
#வருவாய்த்துறை
#சட்டவிரோதசுரங்கம்
#Madurai
#QuarryMining
#TamilNaduNews
#IllegalMining
#RevenueDepartment
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications