மதுரை லாரி ஓட்டுநர் மரண வழக்கு: சிசிடிவி காட்சிகளைப் பார்க்க மனைவிக்கு நீதிமன்றம் அனுமதி

மதுரை காவல்நிலையத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த வழக்கில், சிசிடிவி காட்சிகளைப் பார்க்க அவரது மனைவிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
செக்கனூரணி காவல்நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், முக்கிய திருப்பமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. உயிரிழந்த ஓட்டுநரின் மனைவி பி.சுதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமார், சம்பவம் தொடர்பாக நான்கு காவல்நிலையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளைப் பார்க்க மனுதாரருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, செக்கனூரணி, உசிலம்பட்டி டவுன், உசிலம்பட்டி தாலுகா மற்றும் வாலாந்துார் ஆகிய நான்கு காவல்நிலையங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவர் பார்வையிடலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையின் போது மனுதாரருடன் அவரது வழக்கறிஞர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இருவர் மட்டுமே உடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக மின்னணு சாதனங்களை யாரும் உடன் எடுத்துச் செல்லக்கூடாது என்றும், காட்சிகளைப் பதிவு செய்யக்கூடாது என்றும் நீதிபதி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். சிபிசிஐடி அலுவலகத்தில் உள்ள தொழில்நுட்ப வல்லுநரின் உதவியுடன் இந்த காட்சிகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இக்காட்சிகளைப் பார்வையிடுவது சட்டப்பூர்வமான நோக்கத்திற்காக மட்டுமே என்றும், இதனை பொதுவெளியிலோ அல்லது ஊடகங்களிலோ விவாதிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று நீதிபதி கறாராக அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர், சிசிடிவி காட்சிகளை மனுதாரரிடம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், இதுபோன்ற உணர்ச்சிகரமான வழக்கில் ஆதாரங்களை வழங்குவது விசாரணையைப் பாதிக்கும் என்றும், காட்சிகள் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் வாதிட்டார். எனினும், உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் இருந்ததை பிரேதப் பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதால், உண்மையை கண்டறிய சிசிடிவி பதிவுகள் மிக முக்கியமானது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
வழக்கு விசாரணையின் போது நீதிபதி ஆர்.விஜயகுமார் பல முக்கியமான கேள்விகளை எழுப்பினார். ஒரு புகார்தாரராக காவல்நிலையம் சென்றவர், அங்கேயே தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, காவல்நிலையத்தில் இத்தகைய மரணம் நிகழ்ந்தது மிகுந்த கவலையளிக்கிறது என்றார். தற்கொலைக்கு முன்னதாக லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மீது புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இதுவரை அது தொடர்பாக எந்தவித முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்படவில்லை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். சட்டப்பூர்வமான விசாரணைக்கு இந்த சிசிடிவி பதிவுகள் பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.









