dhina anjal logo
முகப்பு/வணிகம்

மதுரை மார்க்கெட்டில் விண்ணைத் தொடும் மல்லிகைப் பூ விலை: கிலோ ரூ.1,700-க்கு விற்பனை

By Admin
14/09/2026
20 views
மதுரை மார்க்கெட்டில் விண்ணைத் தொடும் மல்லிகைப் பூ விலை: கிலோ ரூ.1,700-க்கு விற்பனை

விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாட்களால் மதுரையில் மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூ.1,700 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூவின் விலை அதிரடியாக உயர்ந்து கிலோ 1,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினம் அடுத்தடுத்து வருவதால், பூக்களுக்கான தேவை பொதுமக்களிடையே மற்றும் வியாபாரிகளிடையே கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ 500 முதல் 700 ரூபாய் வரை விற்பனையான மல்லிகை, தற்போது மூன்று மடங்குக்கும் மேலாக விலை உயர்ந்துள்ளது நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பூக்களின் தேவை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த மலர் வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் தெரிவிக்கையில், சந்தைக்கு தினமும் சுமார் 2.5 டன் மல்லிகை பூக்கள் வரத்து உள்ளது. எனினும் பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் என்பதால் விலை குறைய வாய்ப்பில்லை. புரட்டாசி மாதம் பிறக்கும் வரை இதே போன்ற விலை நீடிக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை சந்தைக்கு வடபட்டி, அலங்காநல்லூர், அவனியாபுரம், கொட்டாம்பட்டி மற்றும் அழகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஒருவேளை பூக்களின் வரத்து குறைந்திருந்தால் விலை இன்னும் பன்மடங்கு உயர்ந்திருக்கும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர். நிலக்கோட்டை மற்றும் உசிலம்பட்டி மலர் சந்தைகளில் மல்லிகை விலை கிலோ 2,500 ரூபாய் வரை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மல்லிகை பூ மட்டுமின்றி, பிற மலர்களும் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. பிச்சி மற்றும் கனகாம்பரம் தலா 1,000 ரூபாய்க்கும், முல்லை 900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், ரோஜா 300 ரூபாய், பட்டன் ரோஸ் 250 ரூபாய், பன்னீர் ரோஸ் 350 ரூபாய், சாமந்தி 250 ரூபாய், சம்பங்கி 300 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரளி பூ 250 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து 150 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தாமரை மலர் ஒன்று 50 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுவது சந்தை நிலவரத்தை உணர்த்துகிறது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#மதுரைமல்லிகை
#பூவிலைஉயர்வு
#விநாயகர்சதுர்த்தி
#மதுரைசெய்திகள்
#விலைவாசி
#MaduraiMalli
#FlowerPrice
#MaduraiNews
#MarketUpdate
#FestiveDemand
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications