மயிலாடுதுறை: குடிநீர் தொட்டி மீது மனிதக் கழிவு கண்டெடுப்பு - பின்னணியில் நடந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் கிராமத்தில் குடிநீர் தொட்டியின் மீது மனிதக் கழிவு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், வில்லியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னர்வேலி கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியின் கான்கிரீட் மூடியின் மீது மனிதக் கழிவு கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அலைபேசி சிக்னல் சரியாக கிடைக்காத காரணத்தால், சிக்னல் தேடி தொட்டியின் மேல் பகுதிக்குச் சென்றபோது, அங்கு மனிதக் கழிவு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்தச் செய்தி காட்டுத்தீ போல பரவியதையடுத்து, அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும், மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பகுதிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. சினேகா பிரியா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், இந்த கழிவு குடிநீருடன் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மக்கள் உடனடியாக அந்த இடத்தை சுத்தம் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு முறையான புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
விசாரணையில், தீபாவளி நாளான நவம்பர் 8-ஆம் தேதி இரவு, அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அவசர இயற்கை உபாதை காரணமாகத் தொட்டியின் மேல் பகுதிக்குச் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது. எவ்வித உள்நோக்கமும் இன்றி, தற்செயலாகவே இந்தச் செயல் நடந்ததாகக் காவல் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும், இளைஞர்கள் பலர் இந்தத் தொட்டியின் மேற்பகுதியை நண்பர்களுடன் பேசுமிடமாகப் பயன்படுத்தி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் எச்.எஸ். ஸ்ரீகாந்த் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கிராமத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் தொட்டியின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், கான்கிரீட் பகுதி சிதிலமடைந்துள்ளதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். எலிகள் மற்றும் பிற விலங்குகள் தொட்டிக்குள் விழுவது தொடர் கதையாக உள்ளதாகக் கூறிய மக்கள், புதிய தொட்டி கட்டித்தரக் கோரிக்கை விடுத்தனர். இதைப் பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், வில்லியநல்லூர் கிராமத்தில் புதிய குடிநீர் தொட்டி கட்ட திட்டமிட்டுள்ளதாக உறுதியளித்துள்ளது.









