மருத்துவ ஆராய்ச்சிகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும்: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தல்

மருத்துவ ஆராய்ச்சிகளின் பலன்கள் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதி மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவத்துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் வெறும் ஆய்வகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக தொலைதூர கிராமங்களில் வாழும் அடித்தட்டு மக்களுக்கும் சென்றடையும் வகையில் அமைய வேண்டும் என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வலியுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற தேசிய மருத்துவ அறிவியல் அகாதமியின் (இந்தியா) 66-வது ஆண்டு மாநாடு மற்றும் பட்டமளிப்பு விழாவில் (NAMSCON 2026) கலந்து கொண்டு ஆளுநர் உரையாற்றினார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஆளுநர், மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் பணிகளும், ஆய்வுகளும் சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை எவ்வாறு உயர்த்தப் போகின்றன என்பதைச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சமமான முன்னேற்றம் ஏற்படும்போது மட்டுமே சாத்தியமாகும் என்று அவர் குறிப்பிட்டார். சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் தரமான மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதே உண்மையான வளர்ச்சி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) தலைவர் டாக்டர் அபிஜித் ஷெத் பேசுகையில், மருத்துவத்துறையில் ஏற்பட்டு வரும் மிக வேகமான மாற்றங்கள் குறித்து விளக்கினார். தற்போதுள்ள மருத்துவ உலகில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் எவ்வாறு மருத்துவ நடைமுறைகளை மாற்றியமைக்கின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார். குறிப்பாக, துல்லியமான மற்றும் தனித்துவமான மருத்துவ சிகிச்சை முறைகள் (Precision and personalised medicine) வரும் காலங்களில் மிக முக்கியப் பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டின் கருப்பொருளாக 'ஆரோக்கியமான நாளைக்கான மருத்துவத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு' என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1,200 பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். சுகாதாரத்துறையில் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சைகளை எப்படி வழங்குவது என்பது குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.









