மீஞ்சூரில் புதிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்: தமிழகம் முழுவதும் ரூ.29,863 கோடியில் பிரம்மாண்ட நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பு

மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்படி, சென்னைக்கு அருகிலுள்ள மீஞ்சூரில் தினசரி 400 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்டமான கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ரூ.4,800 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இந்தத் திட்டம் வடக்கு சென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் நீண்டகால குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆவடி மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் வழங்கும் பொருட்டு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மதுரை மற்றும் கடலூர் மாநகராட்சிகள், ஒன்பது நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை அதிகரிக்க ரூ.410 கோடியும், சுமார் 33 பழைய கூட்டுக் குடிநீர் திட்டங்களை புதுப்பிக்க முதல்கட்டமாக ரூ.300 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கழிவுநீர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாளச் சாக்கடை திட்டத்தைப் புதுப்பிக்க முதல்கட்டமாக ரூ.2,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி, குன்றத்தூர் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிகளின் புதிய பகுதிகளுக்கு ரூ.960 கோடியில் புதிய பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மேலும், திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகராட்சிகளில் தலா 9 மெகாவாட் மற்றும் 10 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட குப்பையிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டங்கள் மொத்தம் ரூ.547 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளன.
நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக, சென்னை உட்பட மாநிலத்தின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சாலைகளைச் சீரமைக்க ரூ.1,850 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், மக்கள் நடமாட்டத்திற்கு உகந்த நவீன தெருக்கள், பள்ளி மாணவர்களுக்கான பாதுகாப்பான வழித்தடங்கள் மற்றும் போக்குவரத்து தீவுகளை மேம்படுத்த ரூ.275 கோடி செலவிடப்பட உள்ளது. மேலும், திருச்சி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ரூ.130 கோடி மதிப்பில் பெரிய பூங்காக்களும், தமிழகம் முழுவதும் ரூ.175 கோடி மதிப்பில் 250 புதிய பூங்காக்களும் அமைக்கப்படும். சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் தேர் வீதிகளை நவீனமயமாக்க ரூ.36 கோடியும், கடலூர் கோட்டை முதல் வெள்ளி கடற்கரை வரை பாரம்பரிய நடைபாதை அமைக்க ரூ.8 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.









