மேகமலை புலிகள் காப்பகம்: பழங்குடியின கிராமத்திற்கு சூரியசக்தி மின்வசதி வழங்கிய நபார்டு - நெகிழ்ச்சியில் பொதுமக்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பழங்குடியின கிராமத்திற்கு நபார்டு வங்கி நிதி உதவியுடன் சூரியசக்தி மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தின் (SMTR) அடர்ந்த வனப்பகுதிக்குள் 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நோச்சியோடை கிராமம், பல தசாப்தங்களாக மின்சார வசதியின்றி இருளில் மூழ்கியிருந்தது. பழியர் பழங்குடியினத்தைச் சேர்ந்த 76 பேர் கொண்ட 18 குடும்பங்கள் வசிக்கும் இந்த குக்கிராமம், இப்போது நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் சூரியசக்தி மின்வசதியைப் பெற்றுள்ளது. வனத்துறை சார்பில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த மினி-கிரிட் திட்டம், அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கனவை நனவாக்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், கிராமம் முழுவதும் 36 சூரியசக்தி வீதி விளக்குகள் மற்றும் வீடுகளுக்குத் தேவையான எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் கைபேசிகளை சார்ஜ் செய்யும் வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. சமூக நலக்கூடம் மின்மயமாக்கப்பட்டதன் மூலம், கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி தொலைக்காட்சி பார்க்கும் வசதியும் கிடைத்துள்ளது. வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்ட முதல் சூரியசக்தி மின்சாரத் திட்டம் இதுவென்று நபார்டு வங்கியின் மாவட்ட மேம்பாட்டு அதிகாரி ஜே. ராபின்சன் ராஜா தெரிவித்துள்ளார். காடுகள் பாதுகாப்பு மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகள் ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு, செப்டம்பர் 22-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. சூரியசக்தி மின்சாரம் வந்ததினால், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள அந்த பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இரவில் வனவிலங்குகளால் ஏற்படும் ஆபத்துகள் குறைவதோடு, குழந்தைகளின் கல்விக்கும், தகவல் தொடர்புக்கும் இந்த மின்சாரம் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக தனிமைப்படுத்தப்பட்ட உணர்வுடன் இருந்த தங்களுக்கு, இந்த மின்வசதி கண்ணியமான வாழ்க்கையை நோக்கிய முதல் படி என கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
கிராமத்தின் தலைவரான எஸ். முருகன் கூறுகையில், தங்களது குடியிருப்பு மின்விளக்குகளால் ஒளிவீசுவதைக் காண்பது கனவு போல இருப்பதாகவும், இனி தாங்கள் தடையின்றி கைபேசிகளைப் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார். அதேபோல் வீரம்மாள் என்ற பெண்மணி கூறுகையில், முன்னதாக விஷப்பூச்சிகள் மற்றும் வனவிலங்குகளின் அச்சத்தினால் இரவு நேரங்களில் வெளியே வர முடியாமல் சிரமப்பட்டதாகவும், தற்போது மின்சார வசதி கிடைத்திருப்பது தங்களுக்குப் பெரும் நிம்மதியைத் தருவதாகவும் கூறினார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி மேகமலை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வரும் சூழலிலும், சட்டப்பூர்வமாக பட்டா பெற்று வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.









