முதுமலை காப்பகத்தில் சிறுத்தையைத் துரத்தி வீடியோ எடுத்த அமைச்சர் வன்னி அரசு: வன ஆர்வலர்கள் கண்டனம்

முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் சிறுத்தையைத் துரத்தி ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட அமைச்சர் வன்னி அரசு மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழக சமூக நீதித்துறை அமைச்சரான ஆர். வன்னி அரசு, முதுமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் சிறுத்தையைத் துரத்தி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி நீலகிரி மாவட்டம், முதுமலை பகுதிக்கு அரசுப் பணிகள் நிமித்தமாகவும், பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கவும் அவர் சென்றிருந்தார். அந்த பயணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, வன ஆர்வலர்கள் அமைச்சரின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காலை கருப்பு உடையில் சூரியக் கண்ணாடியுடன் வனப்பகுதிக்குள் சென்ற அமைச்சர், முதுமலை புலிகள் காப்பகத்திற்குச் சொந்தமான ஜீப்பின் முன்புறத்தில் அமர்ந்து கொண்டு சிறுத்தையைப் படம் பிடிப்பதும், அதனைத் துரத்துவது போலவும் ரீல்ஸ் வீடியோவை உருவாக்கியுள்ளார். இந்தச் செயலின் போது அவருடன் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனப் பாதுகாவலர்களும் உடனிருந்தது விவாதப் பொருளாகியுள்ளது. சிறுத்தையைக் கண்டவுடன் அதனைத் துரத்த முற்பட்டதால், அந்த விலங்கு அச்சமடைந்து புதர்களுக்குள் மறைந்து சென்றது. வனவிலங்குகளின் நடத்தை மற்றும் அவற்றைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டிய முறை குறித்த போதிய விழிப்புணர்வு அமைச்சருக்கு இல்லை என்ற குற்றச்சாட்டும் வலுத்துள்ளது.
அதே வீடியோவில், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சபாரி சென்றபோதும், அங்குள்ள காட்டு யானை அச்சமடைந்த காட்சி இடம்பெற்றுள்ளது. வனப்பகுதியில் சாதாரண மக்கள் வாகனங்களை நிறுத்தினாலே அபராதம் விதிக்கும் வனத்துறை, அமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி விதிகளை மீறியது குறித்தும், வனப்பகுதியில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டது குறித்தும் சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். அரசுப் பொறுப்பில் உள்ளவர்கள் வனப் பாதுகாப்புக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், வனவிலங்குகளைத் துன்புறுத்தும் வகையில் அமைச்சர் நடந்து கொண்டிருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறை ஊழியர்கள் அமைச்சருக்கு வனவிலங்குகளின் எச்சரிக்கை உணர்வுகளைக் கூட விளக்கிச் சொல்லத் தயங்கியது அல்லது தவறான வழிகாட்டுதல் வழங்கியது போன்ற சூழல் காணப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து வனத்துறை மற்றும் அரசு தரப்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், வனப்பகுதிக்குள் இத்தகைய பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், இந்த வீடியோ வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.









