திருச்சி கோவில்களில் செல்போன் தடை: டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வசதி ஏற்படுத்த ஏற்பாடு

திருச்சியில் உள்ள ஐந்து முக்கிய கோவில்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருச்சிராப்பள்ளியில் உள்ள ஐந்து முக்கியக் கோவில்களில் செல்போன் பயன்பாட்டிற்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த நடைமுறையினால், கோவிலுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும். ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில் மற்றும் மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் ஆகிய ஐந்து இடங்களில் இந்த புதிய கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கோவிலுக்குள் செல்போன் அனுமதி இல்லாத காரணத்தினால், வழக்கமாக யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகலாம் என்பதால், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. கோவிலுக்கு வெளியே பிரத்யேக சேவை மையங்கள் அமைக்கப்பட்டு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முன்பதிவுகளுக்காகத் தனித்தனி மையங்கள் செயல்படும். இதன் மூலம் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பே யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தவும், பிரசாதம் மற்றும் இதர சேவைகளுக்கான டோக்கன்களைப் பெறவும் முடியும்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலைப் பொறுத்தவரை, முன்பதிவு செய்த பக்தர்கள் அதற்கான அச்சிடப்பட்ட நகல்களைக் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், நன்கொடைகளை யுபிஐ மூலம் செலுத்த விரும்பும் பக்தர்களுக்காகக் கோவில் வளாகத்திற்கு வெளியே கியூ ஆர் (QR) குறியீடுகள் வைக்கப்பட உள்ளன. திருவானைக்காவல் மற்றும் வெக்காளியம்மன் கோவில்களில் பிஓஎஸ் (POS) இயந்திரங்கள் பொருத்தப்பட்ட மையங்கள் திறக்கப்பட உள்ளன. மலைக்கோட்டை கோவிலில் செல்போன் பாதுகாப்பு அறைக்கு அருகிலேயே கியூ ஆர் குறியீட்டு வசதி ஏற்படுத்தப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த திடீர் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பக்தர்கள், யுபிஐ பரிவர்த்தனைக்கு பழகிவிட்ட சூழலில், ரொக்கப் பணத்தைக் கையாள்வது சற்று சவாலானதாகவே இருக்கும் என்று குறிப்பிடுகின்றனர். குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு இந்த நடைமுறை குறித்து முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எவ்வாறாயினும், அனைத்துக் கோவில்களிலும் செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான வைப்பறைகள் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, கோவில் வாசலிலேயே இந்தச் சேவை மையங்கள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.









