dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

திருச்சியில் ரூ.13.49 கோடியில் உருவான நவீன இறைச்சி அங்காடி: பராமரிப்பு இன்றி சீரழியும் அவலம்

By Admin
30/09/2026
64 views
திருச்சியில் ரூ.13.49 கோடியில் உருவான நவீன இறைச்சி அங்காடி: பராமரிப்பு இன்றி சீரழியும் அவலம்

திருச்சியில் ரூ.13.49 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மற்றும் இறைச்சி அங்காடி முறையான பராமரிப்பின்றி சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகத்தால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கிழக்கு பூலேவார்டு சாலையில் சுமார் 13.49 கோடி ரூபாய் செலவில் நவீன மீன் மற்றும் இறைச்சி அங்காடி கடந்த 2024-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. சுமார் 25,000 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களைக் கொண்ட இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தில் மொத்தம் 148 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு என பிரத்யேக இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது பராமரிப்பு பணிகளின்றி மிகுந்த அவல நிலையில் காணப்படுகிறது.

இந்த அங்காடியின் தரைத்தளத்தில் உள்ள 74 கடைகள் முழுமையாக செயல்பட்டு வந்தாலும், முதல் தளத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் அதிக வாடகை காரணமாக காலியாகவே கிடக்கின்றன. கட்டிடத்தின் சுவர்களில் பல்வேறு இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதோடு, வடிகால் வசதிகள் அடைப்படைந்துள்ளதால் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இறைச்சி மற்றும் மீன் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், பொதுப்பாதையில் உள்ள கழிவுநீரும் கலந்து தேங்குவதால் அந்த இடமே வழுவழுப்பான சூழலுடன் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் அங்காடிக்குச் செல்லவே தயங்கும் சூழல் உருவாகியுள்ளது.

வியாபாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்தாமல், மீன் மற்றும் இறைச்சிக் கழிவுகளை பொது இடத்திலேயே கொட்டுவதால் சுகாதாரச் சீர்கேடு மேலும் அதிகரித்துள்ளது. மேலும், வியாபாரிகள் தங்கள் பொருட்களையும், ஐஸ் பெட்டிகளையும் நடைபாதைகளில் வைத்துள்ளதால், வாடிக்கையாளர்கள் நடப்பதற்கு போதிய இடவசதி இன்றி கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் பெரும்பாலும் பூட்டப்பட்டே காணப்படுகின்றன. மேலும், இரவு நேரங்களில் இக்கட்டிடத்தின் உள்ளே மது அருந்துதல் மற்றும் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கூறுகையில், துர்நாற்றம் மற்றும் சுகாதாரமற்ற சூழலால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், வாகனங்களை நிறுத்த முறையான ஏற்பாடுகள் இல்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். சுவரில் ஆணி அடித்தால் கூட பூச்சுகள் உதிர்ந்து விழும் அளவிற்கு கட்டிடத்தின் தரம் மோசமாக இருப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியான புகார்கள் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கழிவுகளைக் கையாளுவதில் உள்ள குறைபாடுகள் தங்களுக்குத் தெரியும் என்றும், விரைவில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#திருச்சி
#மாநகராட்சி
#ஸ்மார்ட் சிட்டி
#சுகாதார சீர்கேடு
#இறைச்சி அங்காடி
#Tiruchy
#Smart City
#Trichy Market
#Civic Issues
#Tamil Nadu News
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications