இயக்குனர் ஜூட் அந்தனி ஜோசப் உடன் இணையும் மோகன்லால்: ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில் உருவாகிறது புதிய திரைப்படம்

நடிகர் மோகன்லால் மற்றும் இயக்குனர் ஜூட் அந்தனி ஜோசப் இணையும் L370 திரைப்படத்தை ஆஷிக் உஸ்மான் தயாரிக்கிறார்.
மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மோகன்லால், இயக்குனர் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்காலிகமாக எல் 370 (L370) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஆஷிக் உஸ்மான் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார். இந்த கூட்டணி குறித்த அறிவிப்பை நடிகர் மோகன்லால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
நடிகர் மோகன்லாலும், இயக்குனர் ஜூட் அந்தனி ஜோசப்பும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறையல்ல. ஏற்கனவே மோகன்லாலின் மகள் விஸ்மயா அறிமுகமான துடக்கம் திரைப்படத்தில் மோகன்லால் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். அந்தத் திரைப்படத்தை ஜூட் அந்தனி ஜோசப் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது முழுநீளத் திரைப்படமாக இவர்கள் இருவரும் இணையும் இந்த புதிய முயற்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் ஆஷிக் உஸ்மானைப் பொறுத்தவரை, மோகன்லாலுடன் அவர் இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும். ஏற்கனவே தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'அதிமனோகரம்' திரைப்படத்தை ஆஷிக் உஸ்மான்தான் தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரைக்கு வரத் தயாராகி வருகிறது. கலி, அஞ்சாம் பத்திரா, தள்ளுமாலா போன்ற வெற்றித் திரைப்படங்களை தயாரித்த அனுபவம் கொண்ட ஆஷிக் உஸ்மான், தற்போது மீண்டும் மோகன்லாலுடன் கைகோர்த்திருப்பது திரைத்துறையில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மோகன்லாலின் திரைப்பயணத்தில் அடுத்தடுத்த சுவாரஸ்யமான திட்டங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. விஷ்ணு மோகன் இயக்கத்தில் 'ஆபரேஷன் கங்கா' என்ற பிரம்மாண்டத் திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இதற்காக ஜார்ஜியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 180 நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அனுப் சத்யன் மற்றும் திலீஷ் போத்தன் இயக்கத்திலும் அவர் தலா ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜூட் அந்தனி ஜோசப் உடனான திரைப்படத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, மோகன்லால் இந்தத் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









