மதுரை அருகே பயங்கரம்: தாயை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற மகனை கொன்று புதைத்த தாய் - கிராம நிர்வாக அலுவலரிடம் சரண்

மதுரை அருகே பாலியல் துன்புறுத்தலுக்கு முயன்ற மகனைத் தாயே கொன்று வீட்டின் உள்ளே புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியில், தன்னை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற சொந்த மகனை, தாயே கொலை செய்து வீட்டின் உள்ளேயே புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்துக் கிடைத்த தகவலின்படி, ஐயம்மாள் என்பவரின் 30 வயது மகன் ஜி. ராஜா என்கிற மெட்டுப்பட்டி ராஜா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே காணாமல் போனது தெரியவந்துள்ளது. இவரது தந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், ராஜா திருமணமாகியும் தனது மனைவியைப் பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளார்.
ராஜாவின் செயல்பாடுகள் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் மற்றும் காவல் துறையினர் சந்தேகம் அடைந்திருந்தனர். அவர் கடந்த சில ஆண்டுகளாக எவ்விதப் பணியும் செய்யாமல், போதைக்கு அடிமையாகி அடிக்கடி அக்கம் பக்கத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார். ராஜா மாயமான பிறகு, அவர் வெளி மாநிலத்தில் வேலைக்குச் சென்றுள்ளதாக ஐயம்மாள் கூறி வந்துள்ளார். ஆனால், ஐயம்மாளின் முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளும், அவர் இரவு நேரங்களில் தனது வீட்டில் தூங்காமல் வெளியே தங்கியிருந்ததும் அக்கம் பக்கத்தினரிடையே சந்தேகத்தை வலுப்படுத்தியது.
நீண்ட நாட்களாக இந்த மர்மம் நீடித்து வந்த நிலையில், புதன்கிழமை ஐயம்மாள் திடீரென கிராம நிர்வாக அலுவலரை (VAO) நேரில் சந்தித்து சரணடைந்தார். அப்போது, தனது மகன் தன்னைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாகவும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவே அவனை கொலை செய்து, வீட்டில் கழிப்பறை கட்டப்படும் இடத்தில் புதைத்துவிட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்குமூலத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர், இது குறித்து கருப்பயூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், இந்தச் சம்பவத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் உள்ளே புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் உடலை வியாழக்கிழமை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தடயவியல் பரிசோதனை மற்றும் உடற்கூறாய்வு அறிக்கைக்குப் பிறகே உயிரிழப்புக்கான முழுமையான காரணங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.









