தென்காசி அருகே குடும்பப் பிரச்சனை: இரு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே குடும்பப் பிரச்சனையால் இளம் பெண் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடக்குச் சத்திரம் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக 29 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது இரண்டு ஆண் குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் காளிபாண்டி என்பவரின் மனைவி மாரியம்மாள் மற்றும் அவர்களது மகன்களான 5 வயது கபினீஸ்வரன், 4 வயது ரபினீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கட்டிட வேலை செய்யும் காளிபாண்டிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவம் நடந்த திங்கள்கிழமை இரவு, கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழாவிற்கு மாரியம்மாள் தனது குழந்தைகளுடன் சென்றிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த கணவர் காளிபாண்டி, மாரியம்மாளுடன் தகராறில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மனவேதனை அடைந்த மாரியம்மாள், குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். பின்னர் வீட்டை உள்ளே பூட்டிக்கொண்டு, குழந்தைகளைத் துன்புறுத்தி கொலை செய்த பிறகு, தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வீட்டிற்குள் இருந்து குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது, பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த குழந்தைகளை மீட்டு, உடனடியாக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குழந்தைகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இருப்பினும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, இரண்டு சிறுவர்களும் செவ்வாய்க்கிழமை காலை பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற தற்கொலை எண்ணங்களை எதிர்கொள்பவர்கள் மற்றும் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் உரிய ஆலோசனைகளைப் பெற அரசின் உதவி எண்களான 104 அல்லது 044-24640050 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு தற்காத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.









