நாகப்பட்டினத்தில் தொடரும் பாதாள சாக்கடை சீர்கேடு: குடிநீர் மாசுபாட்டால் மக்கள் அவதி

நாகப்பட்டினம் வடக்கு அம்பேத்கர் நகரில் பல மாதங்களாக நீடிக்கும் பாதாள சாக்கடை அடைப்பு மற்றும் குடிநீர் மாசினால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு, வடக்கு அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் சுமார் 175-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல மாதங்களாக பாதாள சாக்கடை அடைப்பினால் கடும் சுகாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. வீதிகளில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்து தேங்கி கிடப்பதால், அப்பகுதி மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, கழிவுநீர் சாலைகளில் தேங்கியிருப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
குடியிருப்புகளில் தேங்கியுள்ள கழிவுநீரால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், இது குடியிருப்பாளர்களின் உடல்நலனைப் பாதிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சுகாதாரக் கேடு காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அண்மையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாகக் கூறும் பொதுமக்கள், தொடர்ச்சியாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், நகராட்சி வழங்கும் குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலப்பதாகக் கூறி அவர்கள் கடும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். கடந்த வாரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிய லெனினிய) பிரதிநிதிகள் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதன் பேரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கொசு ஒழிப்புப் பணிகள் மற்றும் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பாதாள சாக்கடை கட்டமைப்பு 2004-ம் ஆண்டு சுனாமியின் போது வீடுகளை இழந்தவர்களுக்காக தன்னார்வ அமைப்புகளால் கட்டித் தரப்பட்டவை. எனினும், அந்த திட்டத்தில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கான சரியான வழித்தடம் இல்லாததே இந்த தொடர் பிரச்சினைக்குக் காரணம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த நகராட்சி ஆணையர் எஸ். கோபிநாத், பாதாள சாக்கடை பிரச்சினையைச் சரிசெய்ய நிரந்தரத் தீர்வு காண ஆய்வு நடைபெற்று வருவதாகவும், குடிநீர் மாசுபாடு குறித்த புகாரின் பேரில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார். மேலும், அந்தப் பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் தனியார் காலி மனையில் உள்ள சுகாதாரமற்ற சூழலைச் சரிசெய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.









