நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பெண் மர்ம மரணம்: தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான குற்றச்சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹாத்கர், சம்பவம் குறித்து ஏழு நாட்களுக்குள் விரிவான நடவடிக்கை அறிக்கையை (ATR) சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 18-ம் தேதி, ரயில் நிலையத்தில் உள்ள யார்டில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியின் இருக்கைக்கு அடியில், உர்மிளா மார்கோம் (52) என்ற பெண்ணின் சிதைந்த நிலையில் உள்ள உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த ரயில்வே காவல்துறையினர், அங்குள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளின் அடிப்படையில், செண்பகராமன்புதூரைச் சேர்ந்த ஜே. ஐயப்பன் (31) என்பவரை வெள்ளிக்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கை மிகவும் தீவிரமாகவும், காலக்கெடுவுக்குள்ளும் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை உடனடியாகக் கண்டறிந்து அவர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தடயவியல் ஆதாரங்களையும், முக்கிய கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் முறையாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த படுகொலை சம்பவம் ரயில்வே பாதுகாப்பு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான ஆய்வு செய்யுமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
ரயில் நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள தேசிய மகளிர் ஆணையம், ரயில்வே பாதுகாப்பு படை (RPF), அரசு ரயில்வே காவல்துறை (GRP) மற்றும் ரயில்வே நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையே ஒருங்கிணைப்பு ஏன் இல்லை என்பது குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்ள குளறுபடிகளை களைந்து, தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.









