தமிழ்நாடு அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்: காரணம் என்ன?

உள்ளாட்சித் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு முக்கியமான நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. ஆணையத்தின் விசாரணை அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகளுக்கு அந்தத் துறை சார்ந்த அதிகாரிகள் முறையாகப் பதிலளிக்கத் தவறியதே இந்த நடவடிக்கைக்கு முதன்மைக் காரணமாகும். இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர். அன்புவேந்தன் அளித்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் சேவைகளைப் தனியார்மயமாக்கும் தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவானது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு சலுகைகளைப் பாதிக்கும் என்று அன்புவேந்தன் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், அவர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஆணையம் தொடர்ந்து அனுப்பிய கடிதங்களுக்குத் துறை அதிகாரிகள் உரிய பதிலளிக்கவில்லை என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும்.
அரசு அலுவலகத்திற்குச் சென்றபோது தன்னிடம் அதிகாரிகள் முரண்பட்ட தகவல்களை அளித்ததாகவும், மனுவின் தற்போதைய நிலை குறித்துக் கேட்டபோது, நகராட்சி நிர்வாகத் துறையின் துணைச் செயலாளர் கரிகாலன் தன்னிடம் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்டதாகப் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார். மனு தொடர்பான கோப்புகள் தன்னிடம் இல்லை என்று அவர் மறுத்ததாகவும் அன்புவேந்தன் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழலில், அரசியலமைப்பின் 338-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள், மனுவில் உள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழுமையான விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதில் அளிக்கத் தவறினால், சிவில் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரத்தைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்படும் என்று ஆணையம் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், உரிய ஆய்வு செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.









