dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தேசிய நெடுஞ்சாலை 32: ராமநாதபுரம் - நாகப்பட்டினம் இடையே 12 பாலங்களைச் சீரமைக்க ரூ.10.57 கோடி ஒதுக்கீடு

By Admin
12/10/2026
55 views
தேசிய நெடுஞ்சாலை 32: ராமநாதபுரம் - நாகப்பட்டினம் இடையே 12 பாலங்களைச் சீரமைக்க ரூ.10.57 கோடி ஒதுக்கீடு

தேசிய நெடுஞ்சாலை 32-ல் உள்ள 12 பாலம் பழுதடைந்த நிலையில், அவற்றைச் சீரமைக்க ரூ.10.57 கோடியில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் முதல் ராமநாதபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 32-ல் அமைந்துள்ள 12 பாலங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நடத்திய விரிவான கட்டமைப்பு தணிக்கையில், இப்பாலங்களின் கான்கிரீட் மற்றும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்தும், சிதைவடைந்தும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அவசரச் சீரமைப்புப் பணிகளுக்காக 10.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளியோடைவயல், மருதாங்கவயல், வள்ளிக்கொள்ளைக்காடு, மறவன்வயல், மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், பெரியமடைப்பாய்ச்சல், நத்தனிபுரக்குடி, கணதாங்குடி, ஏ.மணக்குடி மற்றும் சித்துருவாடி ஆகிய இடங்களில் உள்ள பாலங்களில் இந்த பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தனியார் ஆலோசனை நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த தணிக்கையில், அல்ட்ராசோனிக் பல்ஸ் வெலாசிட்டி, ரீபவுண்ட் ஹேமர் மற்றும் ஹாப்-செல் பொட்டன்ஷியல் போன்ற நவீன பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இவற்றின் முடிவுகள் பாலம் வலுவிழந்துள்ளதை உறுதிப்படுத்தின.

இந்த ஆய்வில், கான்கிரீட்டிற்குள் உள்விரிசல்கள் இருப்பது மற்றும் இரும்பு கம்பிகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. பல இடங்களில் கான்கிரீட் அடுக்குகள் பெயர்ந்து விழுந்திருப்பதும், தாங்கு உருளைகள் (Bearings) துருப்பிடித்துச் செயல்படாத நிலையில் இருப்பதும் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும், பாலத்தின் விரிவு மூட்டுகளில் (Expansion joints) குப்பைகள் மற்றும் செடிகள் வளர்ந்ததால், மழைநீர் தேங்கி கட்டமைப்பு பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. உப்பு படிமங்கள் மற்றும் கசிவுகள் பாலத்தின் வலிமையைக் குலைக்கும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகின்றன.

மேற்கொள்ளப்படவுள்ள சீரமைப்புப் பணிகளின் கீழ், சேதமடைந்த கான்கிரீட்டுகளை அகற்றி, துருப்பிடித்த இரும்பு கம்பிகளுக்கு சிகிச்சை அளித்து பலப்படுத்துதல், விரிசல்களை அடைத்தல், தூண்களுக்கு கான்கிரீட் ஜாக்கெட்டிங் செய்தல் மற்றும் கார்பன் ஃபைபர் ரீஇன்ஃபோர்ஸ்டு பாலிமர் மூலம் வலுப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். பெரிய அளவிலான பழுதுபார்ப்புப் பணிகளுக்கு முன்னதாக, பாலத்தின் சுமை தாங்கும் பகுதிகளை தற்காலிக தாங்கிகள் மூலம் பாதுகாக்கவும், பணிகள் முடிந்த பிறகு தரம் உறுதி செய்யப்பட்ட பின்னரே கனரக வாகன போக்குவரத்திற்கு அனுமதி வழங்கவும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தேசியநெடுஞ்சாலை
#ராமநாதபுரம்
#பாலம்சீரமைப்பு
#NHAI
#தமிழகசெய்திகள்
#NH32
#Ramanathapuram
#RoadInfrastructure
#BridgeRepair
#TamilNaduRoads
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications