இந்திய விளையாட்டுத் துறையில் புதிய புரட்சி: பயிற்சியாளர்களுக்கான பிரத்யேக இந்திய மேன்மைப் பள்ளியைத் தொடங்கிய நீரஜ் சோப்ரா மற்றும் கோபிசந்த்

இந்திய விளையாட்டுத் துறையில் பயிற்சியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் நீரஜ் சோப்ரா மற்றும் புலேலா கோபிசந்த் இணைந்து இந்திய பயிற்சியாளர் மேன்மைப் பள்ளியை (ISCE) தொடங்கியுள்ளனர்.
இந்திய விளையாட்டுத் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர் நீரஜ் சோப்ராவின் அறக்கட்டளை, பிரபல பாட்மிண்டன் பயிற்சியாளர் புலேலா கோபிசந்த் மற்றும் ஏஐஎஸ்டிஎஸ் இந்தியா (AISTS INDIA) ஆகியவை இணைந்து 'இந்திய பயிற்சியாளர் மேன்மைப் பள்ளியை' (Indian School of Coaching Excellence - ISCE) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. விளையாட்டு பயிற்சியாளர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி, இந்திய விளையாட்டு சூழலை வலுப்படுத்துவதே இந்த முன்னெடுப்பின் முதன்மை நோக்கமாகும்.
இந்த அமைப்பானது வெறும் தொழில்நுட்பப் பயிற்சிகளை மட்டும் வழங்காமல், நவீன விளையாட்டு அறிவியல்கள், உடல் திறன் மேம்பாடு, விளையாட்டு சார்ந்த கல்வி மற்றும் தொழில்நுட்ப நுணுக்கங்களை உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட பயிற்சித் திட்டங்களை வடிவமைத்துள்ளது. சர்வதேசத் தரத்திலான விளையாட்டுப் பயிற்சியாளர்களை உருவாக்கி, அவர்கள் எதிர்கால விளையாட்டு வீரர்களைச் செதுக்கும் வகையில் தயார்படுத்துவதே இதன் முக்கியக் குறியிலாகும். மேலும், அரசு விளையாட்டு அமைப்புகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அறிவுப் பகிர்வு தளமாக இது செயல்படும்.
இந்தத் தொடக்க விழா குறித்து கருத்து தெரிவித்த புலேலா கோபிசந்த், இந்திய விளையாட்டுத் துறையின் எதிர்காலம் வலுவான கட்டமைப்பிலேயே அடங்கியுள்ளது என்றும், அதில் பயிற்சியாளர்கள் இதயமாகச் செயல்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். உலகளாவிய சிறந்த நடைமுறைகளை இந்திய அனுபவத்துடன் இணைத்து, பயிற்சியாளர்கள் தொடர்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட இந்தத் தளம் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பயிற்சியாளர்களின் தொடர்ச்சியான திறன் மேம்பாடு இந்திய விளையாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, ஒரு விளையாட்டு வீரரின் வெற்றிக்கு வழிகாட்டியாக இருக்கும் பயிற்சியாளர்களின் பங்கு மிக முக்கியமானது என்றார். ஒரு சிறந்த வீரரை உருவாக்க, ஒரு சிறந்த பயிற்சியாளருக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் நவீன அறிவியல் அறிவுகள் கட்டாயம் தேவை என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் பயிற்சியாளர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டு, அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்தி, அவர்களின் முழு திறனை வெளிக்கொண்டுவர உதவும் ஒரு சூழலை உருவாக்க நீரஜ் சோப்ரா அறக்கட்டளை முயற்சிக்கும் என்று அவர் தெரிவித்தார்.









