டிஎன்பிஎல் 2026: ரித்திக் ஈஸ்வரனின் அதிரடி ஆட்டத்தால் கோவை கிங்ஸை வீழ்த்திய நெல்லை ராயல் கிங்ஸ்

டிஎன்பிஎல் தொடரின் விறுவிறுப்பான ஆட்டத்தில் கோவை கிங்ஸை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் விதா கோவை கிங்ஸ் அணியைத் தோற்கடித்தது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கிய நிலையில், முதலில் பேட் செய்த கோவை கிங்ஸ் அணி தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்தைச் சந்தித்தது. தொடக்க ஆட்டக்காரர் ராதாகிருஷ்ணன் இம்மானுவேல் செரியனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும், அடுத்து களமிறங்கிய எஸ்.லோகேஷ்வர் மற்றும் சச்சின் ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டெடுத்தது. இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்கு 59 ரன்களைச் சேர்த்தனர். லோகேஷ்வர் 26 ரன்களில் யுதிஸ்வரனிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
யுதிஸ்வரனின் சிறப்பான பந்துவீச்சு கோவை கிங்ஸ் அணிக்குத் தொடர்ந்து நெருக்கடியைக் கொடுத்தது. அவர் அடுத்ததாக ஆண்ட்ரே சித்தார்த் விக்கெட்டையும் வீழ்த்தினார். சச்சின் 42 ரன்களும், கேப்டன் எம்.ஷாருக்கான் 29 ரன்களும் எடுத்ததன் மூலம், கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைக் குவித்தது. யுதிஸ்வரன் 25 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நெல்லை அணியின் பந்துவீச்சில் முக்கியப் பங்காற்றினார்.
வெற்றிக்கான இலக்கை நோக்கித் துரத்திய நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. தொடக்க வீரர் சந்தோஷ் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இந்தச் சூழலில், ரித்திக் ஈஸ்வரன் தனி ஒருவனாகப் போராடி அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். அவர் 31 பந்துகளில் 69 ரன்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். கடைசி மூன்று பந்துகளில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டபோது, ரித்திக் ஈஸ்வரன் ஜி.கிஷோரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும், சச்சின் ரதி பதற்றமடையாமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய ரித்திக் ஈஸ்வரன், கடைசி வரை களத்தில் நின்று பார்ட்னருடன் இணைந்து ரன்களைச் சேர்த்தால் இலக்கை எட்ட முடியும் என்று நம்பியதாகவும், இந்தத் தொடரில் நிலைத்து நின்று விளையாடும் பேட்டர்களுக்கே வெற்றி கிடைப்பதாகவும் குறிப்பிட்டார். துணை கேப்டனாகப் பொறுப்பேற்றது தனது ஆட்டத்தில் கூடுதல் பொறுப்பை உணர்த்தியுள்ளதாக அவர் கூறினார். மறுபுறம், கோவை கிங்ஸ் கேப்டன் ஷாருக்கான் தோல்வி குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், ஆட்டத்தை இறுதி வரை கொண்டு சென்றது நேர்மறையான விஷயம் என்றும், பந்துவீச்சில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.









