நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் மீட்பு: டெல்லி வந்தடைந்த 21 பேர் - அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியிருந்த 21 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு டெல்லி வந்தடைந்தனர்.
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு சுற்றுலா மற்றும் புனித யாத்திரை சென்றிருந்த பல இந்தியர்கள் சிக்கித் தவித்தனர். இதில் கயிலை மானசரோவர் புனித யாத்திரை மேற்கொண்ட 21 தமிழர்கள், கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டு புதுடெல்லி வந்தடைந்தனர். இந்த மீட்புப் பணியை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் நேபாள ராணுவத்தின் உதவியுடன் ஒருங்கிணைத்து, அவர்கள் தாயகம் திரும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதுடெல்லி விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேரில் சென்று, பாதுகாப்பாகத் திரும்பிய அந்தப் பக்தர்களை வரவேற்று நலம் விசாரித்தார்.
இந்த இக்கட்டான சூழலைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உடனடியாகச் செயல்பட்டு, மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்டு வருவதற்கான ஏற்பாடுகளைக் கண்காணிக்க, மாநில அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஏ. ராஜ் மோகன், ஆர். வினோத் மற்றும் கே. தென்னரசு ஆகியோரைக் கொண்ட குழுவை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். இந்த அமைச்சர்கள் குழு, இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியைச் சந்தித்து, மீட்புப் பணிகள் மற்றும் தமிழக மக்கள் பாதுகாப்பாகத் திரும்புவது தொடர்பாக விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி கே. வெங்கட் நாராயணா, முதன்மை வதிவிட ஆணையர் ஆர். ஜெயா மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையர் ஆர். சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர். முதலமைச்சரின் உத்தரவின் பேரில், டெல்லிக்கான வதிவிட ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு காத்மாண்டு விரைந்து, அங்குள்ள நேபாள அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும், நிலவரங்களை உடனுக்குடன் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது சமூக ஊடகப் பதிவில், மீட்கப்பட்டவர்களின் அனுபவங்களைக் கேட்டு உருக்கமாகக் குறிப்பிட்டதுடன், மீட்புப் பணிகளுக்கு உதவிய நேபாள அரசுக்கும், இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தார். நேபாளத்தில் தற்போதும் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியிருப்பதாகக் கருதப்படும் நிலையில், அவர்களைத் தொடர்பு கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியா தரப்பிலிருந்து நிவாரணப் பொருட்கள் ஏந்திய விமானங்கள் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், பேரிடர் மீட்புப் படையினரைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.









