தமிழகத்தில் கட்டிட அனுமதி பெற புதிய நடைமுறை: மூன்றாம் தரப்பு சான்றளிப்பு திட்டம் அறிமுகம்

தமிழகத்தில் குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கு அனுமதி பெற மூன்றாம் தரப்பு சான்றளிப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கட்டிட அனுமதி மற்றும் திட்டமிடல் அனுமதிகளைப் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், மாநில அரசு புதிய மூன்றாம் தரப்பு சான்றளிப்பு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை உள்ளடக்கிய அரசிதழ் அறிவிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், அங்கீகரிக்கப்பட்ட கட்டிடக் கலைஞர்கள் மற்றும் தரம்-1 பொறியாளர்கள், கட்டிடங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படுவதை உறுதி செய்து சான்றளிக்க முடியும்.
இந்தத் திட்டம் குறிப்பிட்ட வகை குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதன்படி, 750 சதுர மீட்டர் வரை பரப்பளவு (FSI) மற்றும் 14 மீட்டர் உயரம் கொண்ட, அதிகபட்சம் எட்டு குடியிருப்புகளைக் கொண்ட கட்டிடங்களுக்கு இந்தச் சலுகை உண்டு. வணிக ரீதியான கட்டிடங்களுக்கு 300 சதுர மீட்டர் பரப்பளவு வரையிலும், வெள்ளை அல்லது பச்சை வகை தொழிற்சாலைகளுக்கு 2,500 சதுர மீட்டர் பரப்பளவு வரையிலும் இந்தத் திட்டம் பொருந்தும். அங்கீகரிக்கப்பட்ட அல்லது முறைப்படுத்தப்பட்ட மனைப் பிரிவுகளில் உள்ள நிலங்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியானவை.
அதேவேளையில், கடற்கரை ஒழுங்குமுறை மண்டலங்கள் (CRZ), மலைப் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் வரும் மலைப் பகுதிகள், சூழலியல் ரீதியாக உணர்திறன் கொண்ட பகுதிகள் மற்றும் அரசு தடை விதித்துள்ள பிற முக்கிய பகுதிகளில் இந்தத் திட்டம் செல்லாது. மேலும், நத்தம் நிலங்கள், விவசாய நிலங்கள், கல்வி மற்றும் பொழுதுபோக்கு மண்டலங்கள், அபாயகரமான தொழிற்சாலைப் பகுதிகள் மற்றும் சாலை விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் இந்தத் திட்டத்தை பயன்படுத்த முடியாது. விண்ணப்பதாரர்கள் தங்கள் கட்டிட வரைபடங்கள், நில ஆவணங்கள் மற்றும் புவிசார் குறியிடப்பட்ட புகைப்படங்களை 'தமிழ்நாடு ஒற்றை சாளர இணையதளம்' (Single Window Portal) மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தச் செயல்முறையை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் உறுதி செய்ய, ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் 10 சதவீதத்தை அரசு இணையதளம் வாயிலாகத் தணிக்கை செய்யும். கட்டிடங்கள் கட்டுமானத்தின் எந்தவொரு நிலையிலும் அதிகாரிகள் ஆய்வு செய்ய அதிகாரம் பெற்றுள்ளனர். தவறுதலாகவோ அல்லது போலி ஆவணங்கள் மூலமாகவோ அனுமதி பெறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் மற்றும் சான்றளித்த பொறியாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதில் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் நிபுணர்களின் பதிவு ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் கருப்புப் பட்டியலிலும் சேர்க்கப்படுவார்கள்.









