மருத்துவத் துறையில் புதிய சவால்கள்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவுரை

இன்றைய மருத்துவர்கள் வளர்ந்து வரும் நோய்களையும் அதிகரித்து வரும் ஆயுட்காலத்தையும் எதிர்கொள்ள நவீன தொழில்நுட்பத்துடன் மருத்துவ அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஸ்ரீ ராமச்சந்திர உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இளம் மருத்துவர்களிடையே ஆற்றிய உரையில், தற்போதைய மருத்துவ உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இன்றைய நவீன மருத்துவ உலகில் மருத்துவர்கள் தொற்றக்கூடிய நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் என இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்றைய மருத்துவர்களின் கைகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மருத்துவக் கருவிகளும், நவீன தொழில்நுட்ப வசதிகளும் தாராளமாகக் கிடைக்கின்றன. இருப்பினும், இந்த நவீன வசதிகளைப் பயன்படுத்தும் போது மருத்துவர்கள் தங்கள் மருத்துவ நுணுக்கத்தையும், நேரிடையான நோயறிதல் திறனையும் (clinical sense) இழக்கக்கூடாது என்றும், தொழில்நுட்பத்தை எவ்வளவு புத்திசாலித்தனமாகப் கையாள்கிறோம் என்பதே தற்போதைய முக்கிய சவாலாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு மக்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 55 ஆண்டுகளாக இருந்த நிலையில், தற்போது அது 65 ஆண்டுகளாக உயர்ந்திருக்கிறது. நீண்ட ஆயுட்காலம் ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும், மறுபுறம் நோய்கள் இளைய வயதினரையே தாக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நோய்களைத் தடுப்பதே எதிர்கால மருத்துவத்துறையின் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். நோய்கள் வருவதற்கு முன்பே அவற்றைத் தடுப்பதற்கான தடுப்பு மருத்துவத்தில் (preventive medicine) இந்தியா உலக அளவில் சிறந்து விளங்கி வருவதாகவும் அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
தடுப்பு மருத்துவத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியர்களின் ஒரு மில்லியன் மரபணுக்களை ஆய்வு செய்து, அவற்றை மருத்துவ முடிவுகளுடன் ஒருங்கிணைக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருவதாக அவர் விளக்கினார். இதன் மூலம் ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் துல்லியமான மருத்துவ சிகிச்சையை வழங்க முடியும் என்பது அரசின் இலக்காகும். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2,116 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறந்த முறையில் பயின்ற 106 மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வழங்கி கௌரவித்தார். ஸ்ரீ ராமச்சந்திர உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் வி.ஆர். வெங்கடாசலம் விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.









