dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

By Admin
24/10/2026
92 views
வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அக்டோபர் 26-ஆம் தேதிக்குள் புயலாக வலுப்பெற்று, ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மாற்றத்தின்படி, அக்டோபர் 25-ஆம் தேதிக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அக்டோபர் 26 காலை மேற்கு மத்திய வங்கக்கடலில் புயலாக உருவெடுக்கும். இது வடக்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 28 காலை ஆந்திர கடற்கரை பகுதியை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளதால், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலான மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பர்லியார் பகுதியில் 25 சென்டிமீட்டர் மழையும், அதனைத் தொடர்ந்து கீழ் கோத்தகிரி பகுதியில் 20 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் கூனூர், மேட்டுப்பாளையம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் நாவலூர் கொட்டப்பட்டு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் கணிசமான மழை பெய்துள்ளது. வரும் நாட்களிலும் நீலகிரி, கோயம்புத்தூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அக்டோபர் 26-ஆம் தேதி அன்று புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#வானிலைஅறிக்கை
#கனமழை
#புயல்எச்சரிக்கை
#தமிழகம்
#வானிலைசெய்தி
#TamilNaduRain
#WeatherAlert
#CycloneUpdate
#ChennaiWeather
#HeavyRain
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications