டெல்லியில் புதிய மின்சார பேருந்து சேவை: பெண்களுக்கான பிரத்யேக பேருந்துகளுடன் அசத்தல் அறிமுகம்

டெல்லியில் கூடுதலாக 200 மின்சார பேருந்துகள் மற்றும் பெண்களுக்கான பிரத்யேக பேருந்து சேவையை முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் துணை நிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சாந்து ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், சுற்றுச்சூழலுக்கு உகந்த 200 புதிய மின்சார பேருந்துகளை முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் துணை நிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சாந்து ஆகியோர் டெல்லி பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த புதிய சேர்க்கையின் மூலம், டெல்லி போக்குவரத்து கழகத்தின் (DTC) ஒட்டுமொத்த பேருந்து எண்ணிக்கை சுமார் 6,800 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,000-க்கும் மேற்பட்டவை மின்சார பேருந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவின் அதிக மின்சார பேருந்துகளைக் கொண்ட நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 56 புதிய பெண்களுக்கான பிரத்யேக மின்சார பேருந்து சேவைகளை அரசு அறிமுகப்படுத்தியது. இது குறித்து பேசிய முதலமைச்சர் ரேகா குப்தா, தனது கல்லூரி காலத்தில் பேருந்து சேவைகளை பயன்படுத்தியதை நினைவு கூர்ந்தார். கடந்த 28 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பெண்களுக்கான சிறப்பு பேருந்து சேவை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். இதற்காக ஜூன் மாதம் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பெண்கள் அதிகம் பயணம் செய்யும் வழித்தடங்கள் கண்டறியப்பட்டு இந்த சேவை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
துணை நிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சாந்து பேசுகையில், இந்தப் பேருந்துகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மாசுவைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டார். ராஜ்காட் பணிமனையில் தொடங்கப்பட்டுள்ள பொது மின்சார வாகன மின்னேற்ற நிலையமும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்தின் கீழ், 15 முக்கிய வழித்தடங்களில் 30 பெண்களுக்கான சிறப்பு பயணங்களும், டெல்லி பல்கலைக்கழக மாணவியர்களுக்காக 13 வழித்தடங்களில் 26 சிறப்பு பயணங்களும் தினசரி இயக்கப்பட உள்ளன. இந்த சேவைகள் நேரு பிளேஸ், எய்ம்ஸ், கன்னாட் பிளேஸ், மற்றும் ஐடிஓ போன்ற முக்கிய கல்வி மற்றும் அலுவலக மையங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
பெண்களின் வசதிக்காக இந்த சிறப்பு பேருந்துகள் இந்து கல்லூரி, ராம்ஜஸ் கல்லூரி, ஸ்ரீ ராம் கல்லூரி, மற்றும் கார்கி கல்லூரி உள்ளிட்ட முக்கிய பல்கலைக்கழக வளாகங்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு ஒரு சிறப்பு பரிசாக, டெல்லி - கர்னால் இடையிலான வழித்தடத்தில் ஐந்து அதிநவீன மின்சார ஏசி பேருந்துகளை போக்குவரத்து அமைச்சர் பங்கஜ் குமார் சிங் தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் தினசரி 10 முறை இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்பான மற்றும் பசுமையான பயணத்திற்கு இந்த புதிய பேருந்து சேவைகள் பெரும் உதவியாக இருக்கும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.









