நீதிமன்றத்தில் மருத்துவர்கள் சாட்சியமளிக்க புதிய வழிகாட்டுதல்கள்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றத்தில் மருத்துவ நிபுணர்கள் சாட்சியமளிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உருவாக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணைகளின் போது மருத்துவ நிபுணர்கள் சாட்சிகளாக ஆஜராகும் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையையும், துல்லியத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. மருத்துவ நிபுணர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை வரையறுக்கும் வகையில், முறையான வழிகாட்டுதல்களை அல்லது சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநருக்கு நீதிபதி பி. புகழேந்தி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவானது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்ஸோ (POCSO) வழக்கு ஒன்றின் விசாரணையின் போது நீதிபதியின் கவனத்திற்கு வந்த முரண்பாடுகளைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. எட்டு வயது சிறுவன் ஒருவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு விசாரணை நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த போதே நீதிமன்றம் இந்த முக்கிய கருத்தைப் பதிவு செய்தது.
வழக்கின் மருத்துவச் சான்றுகளை ஆய்வு செய்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுவன் காயமடைந்ததாகத் தொடக்கத்தில் கூறிய மருத்துவர், குறுக்கு விசாரணையின் போது அந்தத் தகவலை மறுத்திருப்பதைக் கண்டறிந்து அதிருப்தி தெரிவித்தார். இத்தகைய மருத்துவச் சான்றுகளில் உள்ள குளறுபடிகள் நீதிக்கான பாதையில் பெரும் தடையை ஏற்படுத்துவதாகவும், நீதித்துறை நடவடிக்கைகளில் இத்தகைய மெத்தனமான போக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மருத்துவ நிபுணர்கள் தங்களுக்கு முன்னால் வைக்கப்படும் ஒவ்வொரு கேள்வியையும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, சாட்சியங்களைச் சரிபார்த்து கையெழுத்திடும் முன் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஒருவேளை சாட்சியத்தில் ஏதேனும் பிழைகள் அல்லது விடுபடல்கள் இருந்தால், அதனை உடனடியாக நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டியது மருத்துவர்களின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த புதிய வழிகாட்டுதல்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.









