தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் ரூ.54 கோடி மதிப்பில் புதிய தொழில் திட்டங்கள் தொடக்கம்

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் ரூ.54.05 கோடி மதிப்பிலான புதிய தொழில் திட்டங்களை முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் புதன்கிழமை திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இந்தத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். ஈரோடு, விழுப்புரம், திருப்பூர் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 54.05 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்தத் திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) மூலமாக இரண்டு புதிய தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 17.95 ஏக்கர் பரப்பளவில், வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் 15.23 கோடி ரூபாய் செலவில் முதல் தொழில் பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், விழுப்புரம் மாவட்டம் நயனூரில் 29.44 ஏக்கர் பரப்பளவில் 5.67 கோடி ரூபாய் செலவில் இரண்டாவது தொழில் பேட்டையை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்தத் தொழில் பேட்டைகள் அப்பகுதி சிறு தொழில்களின் வளர்ச்சிக்கு முக்கிய ஊக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் மூலப்பாளையத்தில், கயிறு தொழிலுக்காகத் தொழில் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொது வசதி மையத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த மையம் 13.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. கயிறு சார்ந்த உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் பணிகளுக்கு இந்த நவீன வசதி பெரிதும் உதவும். இதன் மூலம் அப்பகுதி சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி மாவட்டம் சோகத்தூரில் 19.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். 80,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில், தனித்தனி விற்பனை மற்றும் காத்திருப்பு இடங்கள், உணவகம், வாகன நிறுத்துமிடம் மற்றும் பட்டு வளர்ப்பு உபகரணங்கள் விற்கும் கடை எனப் பல்வேறு நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், இந்த வளாகத்தில் மின்னணு ஏல முறையும் (e-auction) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது பட்டு விவசாயிகளுக்குத் தங்கள் விளைபொருட்களுக்குச் சரியான விலை கிடைக்க வழிவகை செய்யும்.









