தமிழகத்தின் மூன்று முக்கிய ஆறுகளைப் பாதுகாக்க ரூ.972 கோடியில் புதிய திட்டம்: அமைச்சர் என். ஆனந்த் தகவல்

தமிழ்நாட்டில் கொள்ளிடம், வெள்ளாறு மற்றும் நொய்யல் ஆறுகளில் கடல் நீர் புகுவதைத் தடுக்கவும், நதிகளைச் சீரமைக்கவும் 972 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக உயர்ந்து வரும் கடல் மட்டத்தினால், நதிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் அரசு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன்படி கொள்ளிடம், வெள்ளாறு மற்றும் நொய்யல் ஆறுகளைப் பாதுகாக்கும் வகையில் மொத்தம் 972 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சிதமபரம் மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்தத் திட்டங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, விவசாயப் பயன்பாட்டிற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
கொள்ளிடம் ஆற்றைப் பொறுத்தவரை, கடல்நீர் உட்புகுவதைத் தடுக்க திருவக்கரை மற்றும் அழகக்குடி ஆகிய பகுதிகளுக்கு இடையே தடுப்புச் சுவர் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. ஆரம்பத்தில் 773 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது மாதிரி ஆய்வுகளின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 13,220 ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல்நீர் உட்புகுவதால் சுமார் 18 கிலோமீட்டர் தூரம் வரை பாதிக்கப்பட்டுள்ள கொள்ளிடம் ஆற்றுப் படுகையை மீட்டெடுப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதேபோன்று வெள்ளாற்றில் கடல்நீர் புகுவதைத் தடுப்பதற்காக, புவனகிரி வட்டத்தில் உள்ள அதிவராகநல்லூர் பகுதியில் 194 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை கட்டப்பட உள்ளது. இதில் நிலம் கையகப்படுத்துவதற்காக மட்டும் 44.39 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் நலனை முன்னிறுத்தி இத்தகைய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
திருப்பூர் பகுதியில் நொய்யல் ஆற்றின் மாசடைந்த சூழலை மேம்படுத்தவும் அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் கழிவுநீர்க் கலப்பால் நொய்யல் ஆறு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில் இந்த ஆற்றைச் சீரமைக்க 5 கோடி ரூபாய் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆற்றில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் தேவையற்ற களைச் செடிகளை அகற்றுவதோடு, நீர்வரத்துப் பாதைகளைச் சீரமைக்கவும் இத்திட்டம் வழிவகை செய்யும். இந்தத் திட்டம் தற்போது அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.









