தமிழகத்தின் கனிம வளங்களை மேம்படுத்த புதிய பொதுத்துறை நிறுவனம் தொடக்கம்: மணல் விற்பனைக்கும் வாய்ப்பு

தமிழ்நாடு கனிம வளங்கள் மேம்பாட்டு கழகம் என்ற புதிய பொதுத்துறை நிறுவனத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
தமிழகத்தின் கனிம வளங்களை முறையாக நிர்வகிக்கவும், அவற்றை முழுமையாகப் பயன்படுத்தவும் தமிழ்நாடு கனிம வளங்கள் மேம்பாட்டு கழகம் (TNMRDC) என்ற புதிய பொதுத்துறை நிறுவனத்தை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நிறுவியுள்ளது. இந்த நிறுவனம் மாநிலத்தின் கனிம வளங்களை அகழ்வாராய்ச்சி செய்தல், பதப்படுத்துதல், இறக்குமதி செய்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்ள உள்ளது. குறிப்பாக, கடற்கரை மணலில் காணப்படும் அரிய வகை கனிமங்களை பிரித்தெடுப்பதில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய பொதுத்துறை நிறுவனத்தில், மாநில புவியியல் மற்றும் சுரங்கத்துறை 90 சதவீத பங்குகளையும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) 10 சதவீத பங்குகளையும் கொண்டிருக்க உள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வரம்புகள் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மத்திய அரசின் சுரங்க சட்டத்தின்படி, அணு கனிமங்களை சுரங்கம் செய்வது அரசு நிறுவனங்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால், இக்கழகம் இத்துறைக்கு மிக முக்கிய ஆதாரமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை சோதனைகளுக்குப் பிறகு மூடப்பட்ட 10 முதல் 12 இடங்களில் உள்ள ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த குவாரிகள் திறக்கப்படும் பட்சத்தில், அங்கிருந்து எடுக்கப்படும் மணல் மற்றும் எம்-சாண்ட் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் அதிகாரத்தை இந்த புதிய நிறுவனம் பெற வாய்ப்புள்ளது. மணல் கடத்தலைத் தடுக்கவும், கட்டுமானத் தேவைக்குத் தேவையான மணல் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் இத்திட்டம் ஒரு தீர்வாக அமையும் என்று கருதப்படுகிறது.
தமிழக கடற்கரை மணல் பகுதிகளில் நியோடைமியம், பிரேசோடைமியம், டிஸ்ப்ரோசியம், டெர்பியம் மற்றும் சமாரியம் போன்ற மதிப்புமிக்க அரிய வகை கனிமங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை மின்சார வாகனங்களின் மோட்டார்கள், காற்றாலைகள் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த உபகரணங்களை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இந்த கனிமங்களை பிரித்தெடுத்த பிறகு, பழைய நிலப்பரப்பை மீட்டெடுக்கும் வகையிலான நவீன தொழில்நுட்பங்களை கையாளவும் அரசு திட்டமிட்டுள்ளது. மணல் தட்டுப்பாட்டை நீக்கவும், முறையான வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த புதிய நிறுவனம் அரசுக்கு ஒரு வலுவான தளமாக அமையும்.









