தமிழக சுற்றுலாத்துறையில் புதிய புரட்சி: கப்பல், ரோப் கார் மற்றும் நவீன வசதிகள் அறிமுகம்

தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய கப்பல் மற்றும் படகு போக்குவரத்து திட்டங்கள், ரோப் கார் வசதிகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு பணிகளை அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், பல்வேறு முக்கிய திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறைக்கான மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் எஸ்.ராஜேஷ் குமார் இதற்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, கடல்சார் சுற்றுலா மற்றும் மலைப்பிரதேச சுற்றுலா ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை முதல் கோவளம் வரையிலும், பூம்புகார் - தரங்கம்பாடி - நாகப்பட்டினம் வரையிலும், ராமேஸ்வரம் - தூத்துக்குடி - கன்னியாகுமரி வழித்தடங்களிலும் சொகுசு கப்பல் மற்றும் படகு போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்க ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் வகையில் கொடைக்கானல் மற்றும் ஊட்டி மலைப்பிரதேசங்களில் நவீன ரோப் கார் வசதிகளைக் கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், திட்டப் பணிகள் விரைவாகத் தொடங்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். மேலும், கன்னியாகுமரி, திருப்பூர், கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள அணைப் பகுதிகளில் ரூபாய் 48 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சென்னை மாநகரத்தை இந்தியாவிலேயே முக்கிய வணிகச் சுற்றுலா மையமாக (MICE - Meetings, Incentives, Conferences, and Exhibitions) மாற்றும் நோக்கில், சென்னை எம்.ஐ.சி.இ மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட உள்ளது. வணிக ரீதியான பயணங்கள் மற்றும் சர்வதேச மாநாடுகளை ஈர்க்கும் வகையில் இந்த முயற்சி அமையும். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ரூபாய் 2 கோடி செலவில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதேபோல், சுற்றுலாத் தொழிலைச் சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரூபாய் 1 கோடி மதிப்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.
சுற்றுலாத் தலங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மட்டும் சுமார் ரூபாய் 30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிநீர் வசதி, சாலைகள், ஓய்வறைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை அழகுபடுத்த ரூபாய் 18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு திரைப்பட படப்பிடிப்புத் தளங்களில் பொது-தனியார் பங்களிப்புடன் வாகன நிறுத்துமிடம் மற்றும் இதர வசதிகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விரிவான திட்டங்கள் தமிழகத்தின் சுற்றுலா வரைபடத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









