தமிழ்நாட்டில் ஐ.ஐ.எஸ்.சி. பாணியில் புதிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்: உயர்கல்வித் துறையின் முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாட்டில் பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி. போன்ற உயர்தர அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு மாநிலத்தின் கல்வித் தரத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் முயற்சியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற இந்திய அறிவியல் நிறுவனத்தைப் (IISc) போன்றே, தமிழ்நாட்டிலும் 'அடிப்படை அறிவியல் சிறப்பு நிறுவனம்' (Institute of Excellence in Basic Sciences) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தனிப்பட்ட சட்டத்தின் கீழ் செயல்படும் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இணையான பட்டம் வழங்கும் அதிகாரத்துடன், முழுமையான நிர்வாக சுயாட்சி பெற்ற அமைப்பாகத் திகழும். உயர்கல்வித் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது இந்த முக்கியத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அடிப்படை அறிவியல் துறைகளில் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் நோக்கில் உருவாக்கப்படும் இந்த நிறுவனம், மாநிலத்தை ஒரு அறிவுசார் பொருளாதார மையமாக மாற்ற உதவும். இது குறித்து உயர்கல்வித் துறை செயலாளர் தீரஜ் குமார் கூறுகையில், இந்த முன்முயற்சி மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சிச் சூழலை வழங்கும் என்று தெரிவித்தார். இதனுடன் இணைந்து, புதிய தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அடிப்படை அறிவியல் படிப்புகளைத் தேர்ந்தெடுத்து, உயர்தர ஆராய்ச்சி நிறுவனங்களில் சேரும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வகையில், 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் புதிய திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்படவுள்ளது.
மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் நோக்கில், 2026-27 கல்வியாண்டு முதல் 'கல்வி உத்தரவாதத் திட்டம்' (Education Guarantee Scheme) அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் மாணவர்கள் பிணையம் (Collateral) ஏதுமின்றி 20 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 6,000 உதவிப் பேராசிரியர்களை மூன்று கட்டங்களாக நியமிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. தரமான கல்வியை உறுதி செய்ய, என்.ஏ.ஏ.சி. (NAAC) அங்கீகாரம் பெற்ற 10 அரசு கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.
விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மாணவர்களை ஊக்குவிக்க ஆண்டுதோறும் 10 செயற்கைக்கோள் வடிவமைப்புத் திட்டங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், திருநங்கை மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேரும்போது கல்வி, வாழ்க்கை மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக தலா 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து அரசு கல்லூரிகளில் சேரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படும். விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த, இரண்டு ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள மாணவர்களுக்கும் அரசு கல்வி நிறுவனங்களில் முழு கல்விக் கட்டண விலக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.









