நீலகிரி நிலச்சரிவு: மேட்டுப்பாளையம் - குன்னூர் பாதையில் பேருந்து சிக்கியதால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் புர்லியாரில் நிலச்சரிவில் அரசுப் பேருந்து சிக்கியதில் பயணிகள் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் அதீத கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் உள்ள புர்லியார் பகுதியில் இன்று அதிகாலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் என சுமார் ஆறு முதல் எட்டு பேருடன் சென்ற அரசுப் பேருந்து சிக்கிக்கொண்டது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புர்லியார் பகுதியில் மட்டும் 250 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. இது நீலகிரி மாவட்டத்திலேயே மிக அதிகபட்ச மழைப்பொழிவாகும்.
நிலச்சரிவு குறித்த தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம், குன்னூர், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், கவுண்டம்பாளையம் மற்றும் சூலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர். பேருந்து மீது ராட்சத மரம் மற்றும் மண் சரிந்து விழுந்ததால், வாகனத்தின் உள்ளே சகதி புகுந்து பயணிகள் வெளியே வர முடியாத சூழல் உருவானது. தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட போராட்டத்திற்கு மத்தியில், பேருந்து நடத்துனர் கேசவன் மற்றும் ஒரு பயணி ஆகியோர் மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள், பேருந்திற்குள் இன்னும் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள் என்பது குறித்த தெளிவான விவரங்களை அறிய முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையில், ஊட்டியில் சுற்றுலா முடிந்து திரும்பிக்கொண்டிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், சாலை துண்டிக்கப்பட்டதால் பாதியிலேயே சிக்கிக்கொண்டனர். காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் இணைந்து கயிறுகளின் உதவியுடன் மினி பேருந்துகள் மூலம் அந்த மாணவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மேட்டுப்பாளையம் - ஊட்டி, ஊட்டி - கோத்தகிரி மற்றும் ஊட்டி - மஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு மலைப்பாதைகளில் சுமார் 19 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து ஆட்சியர் லட்சுமி பவ்யா தனேரு உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்டத்தில் மொத்தம் 18 இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.









