நீலகிரியில் அரிய வகை உயிரினங்களுக்கான பிரத்யேக விழிப்புணர்வு மையம் திறப்பு

நீலகிரி மாவட்டத்தில் அரிய வகை உயிரினங்களான மார்டென் மற்றும் பிபிட் பறவை குறித்த விழிப்புணர்வு மையத்தை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித் குமார் திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், நீலகிரி மார்டென் மற்றும் நீலகிரி பிபிட் ஆகிய அரிய வகை உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய விளக்க மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித் குமார் முறைப்படி திறந்து வைத்தார். சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தநேரு மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் ஆர்.கிருபா சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். நீலகிரி மார்டென் என்பது மேற்கு தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகளில் காணப்படும் ஒரு அரிய வகை மாமிச உண்ணி பாலூட்டியாகும். அதேபோல், நீலகிரி பிபிட் என்பது புல்வெளி பகுதிகளில் மறைந்து வாழும் ஒரு அரிய பறவை இனமாகும். இந்த இரண்டு உயிரினங்களின் வாழ்விடங்கள், பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க முறைகள் குறித்து பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விரிவான தகவல்களை வழங்குவதே இந்த மையத்தின் முதன்மை நோக்கமாகும்.
வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கும் தகவல்படி, இந்த மையத்தில் உயிரியலாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். நீலகிரி வனக்கோட்ட அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி குறிப்பிடுகையில், நீலகிரி மார்டென் இந்தியாவின் தனித்துவமான ஒரு இனம் என்றும், இது வனப்பகுதியின் ஆரோக்கியத்தை குறிக்கும் ஒரு சூழலியல் சுட்டிக்காட்டியாக செயல்படுகிறது என்றும் தெரிவித்தார். அதேபோல பிபிட் பறவை அதன் வாழ்விடத் தேர்வின் மூலம் சூழலியல் மாற்றங்களை உணர்த்தும் ஒரு முக்கியமான பறவையாக உள்ளது.
தமிழ்நாடு வனத்துறையானது மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரிய வகை உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இதுபோன்ற மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. நீலகிரியின் தனித்துவமான சூழலியல் அமைப்பைப் பாதுகாப்பதிலும், இது தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதிலும் இந்த மையம் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இந்த மையத்திற்கு வருகை தந்து, அழியும் நிலையில் உள்ள இந்த உயிரினங்கள் குறித்த அறிய தகவல்களைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.









