தமிழ்நாடு சிறைகளில் இனி சாதி விவரங்கள் பதிவு செய்யப்படாது: மத்திய அரசுக்கு மாநில அரசு தகவல்

தமிழ்நாடு சிறைகளில் கைதிகளின் சாதி விவரங்களைப் பதிவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசுக்குத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளைச் சேர்க்கும்போது, அவர்களின் சாதி விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறை முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த முக்கியத் தகவலை கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதியே மாநில சிறைத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. உச்ச நீதிமன்றம், சிறைகளில் நிலவும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
சிறை நிர்வாகத்தில் டிஜிட்டல் முறையைப் பின்பற்றும் தமிழ்நாடு, தற்போது தனது டிஜிட்டல் சிறை மேலாண்மை அமைப்பிலிருந்தும் சாதி விவரங்களை உள்ளீடு செய்யும் வசதியை முற்றிலுமாக நீக்கியுள்ளது. சட்டப்பூர்வமான விதிகளின்படி, சிறைகளில் சாதி அடிப்படையில் கைதிகளைப் பிரித்து வைப்பதோ, வேலைகளை ஒதுக்குவதோ அல்லது பாகுபாடு காட்டுவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளுக்கு உட்பட்டு, சிறை வளாகங்களுக்குள் கழிவுநீர் அகற்றுதல் மற்றும் செப்டிக் டேங்குகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் கைதிகளை ஈடுபடுத்தும் மனிதாபிமானமற்ற செயல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணிகளைக் கவனிப்பதற்காக முறையான அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கைதிகளின் வாழ்க்கைச் சூழல், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, சுகாதாரம், மருத்துவ வசதிகள் மற்றும் தொழில்முறைப் பயிற்சிகள் ஆகியவற்றைக் கண்காணிப்பதற்காக, அரசு மற்றும் அரசு சாரா உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீனக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக் குழுக்கள் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒருமுறை சிறைகளை ஆய்வு செய்து, கைதிகளின் குறைகளைக் கேட்டுத் தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
சிறைத்துறை நிர்வாகத்தில் மேலும் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் குறிப்பாக, மாற்றுத்திறனாளி கைதிகளுக்கான சிறப்பு மருத்துவ வசதிகள், சம உரிமை மற்றும் பாகுபாடற்ற சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கைதிகளின் உரிமைகள், பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் அவர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளை உள்ளடக்கிய புதிய சட்டவரைவு ஒன்று மாநில அரசின் இறுதிப் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிறைகளில் சாதி பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைச் செயல்படுத்தத் தவறும் மாநிலங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்த முன்னெடுப்புகள் கவனத்தை ஈர்த்துள்ளன.









