dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளுக்கு இடமில்லை: இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு

By Admin
19/09/2026
21 views
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளுக்கு இடமில்லை: இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை மட்டுமே தொடரும் என்றும், நவோதயா பள்ளிகளுக்கு நிலம் வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் ஏ. ராஜமோகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையை அமல்படுத்துவதில் அரசு மிகுந்த உறுதியுடன் இருப்பதாகவும், நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்காக தமிழக அரசு எவ்வித நிலத்தையும் வழங்காது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ. ராஜமோகன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய அவதானிப்புகள் குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தைப் பொறுத்தவரை இருமொழி கொள்கை என்பதே என்றும் மாறாத நிலைப்பாடு என்றும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

நீதிமன்றத்தின் கருத்துக்கள் ஒரு இறுதித் தீர்ப்பு அல்ல என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் ராஜமோகன், தங்களுக்கு இந்தி மொழியிலோ அல்லது பிற மொழிகளிலோ எந்த விரோதமும் இல்லை என்றும், ஆனால் தமிழ்நாட்டின் மண்ணுக்கும் மக்களுக்கும் தமிழ் மொழியே முன்னுரிமை பெறும் என்பதில் ஐயமில்லை என்றும் தெரிவித்தார். ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் முன்மாதிரி பள்ளிகள் மூலம் தரமான கல்வி வழங்கப்பட்டு வருவதாகவும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலான மத்திய அரசு கல்வி நிலையங்களுக்கு நிலம் வழங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். நவோதயா பள்ளிகளைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், தேவைப்பட்டால் தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி, மாநிலத்தின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இருமொழி கொள்கையைப் பின்பற்றுவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை என்று குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3,548 கோடி ரூபாய் சமக்ரா சிக்ஷா நிதி விவகாரத்தில் சட்டப் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய மாற்றங்கள் குறித்துப் பேசிய அமைச்சர் ராஜமோகன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்தார். சிறைவாசிகள் உண்ணும் உணவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்குவதில் உள்ள நியாயத்தை எடுத்துரைத்த அவர், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள், சமையல் கலைஞர்கள் மற்றும் பெற்றோர்களை உள்ளடக்கிய சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்ய விரிவான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தமிழகஅரசு
#இருமொழிக்கொள்கை
#பள்ளிக்கல்வித்துறை
#ராஜமோகன்
#கல்விக்கொள்கை
#TamilNaduGovt
#LanguagePolicy
#EducationPolicy
#Rajmohan
#NavodayaSchools
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications