சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான ஒடியா திரைப்படம் 'பகுனி'

ஒடியா மொழியில் உருவான 'பகுனி' திரைப்படம் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் வகையில் உருவான 'பகுனி' (Baghuni) எனும் திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) திரையிடப்பட தேர்வாகியுள்ளது. நவம்பர் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புகழ்பெற்ற திரைப்பட விழாவில், இடம்பெற்றுள்ள ஒரே ஒடியா திரைப்படம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய திரைப்பட விருது பெற்ற இயக்குநரான ஜிதேந்திர மிஸ்ரா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், கிராமப்புறத்தில் வசிக்கும் மினி என்ற 11 வயது சிறுமியின் கனவை மையமாகக் கொண்டது. பாரம்பரியமாக ஆண்களால் மட்டுமே ஆடப்பட்டு வரும் 'பகா நாச்சா' (Bagha Nacha) எனும் புலி நடனத்தை, தானும் ஆட வேண்டும் என அந்த சிறுமி கொள்ளும் தீராத விருப்பமே இப்படத்தின் கதைக்களம். சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாடு மற்றும் கலாச்சார கட்டுப்பாடுகளை உடைத்து, ஒரு சிறுமி தனது எதிர்காலத்தை எப்படி தீர்மானிக்கிறாள் என்பதை இப்படம் உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது.
இத்திரைப்படம் இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC), இங்கிலாந்தைச் சேர்ந்த குளோக்கல் பிலிம்ஸ் மற்றும் சினிமா4குட் ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் சப்யசாச்சி மிஸ்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ஒடிசா மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட கடுமையான தணிக்கை மற்றும் தேடல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான குழந்தைகள் பலர் நடித்துள்ளனர்.
படம் குறித்து கருத்து தெரிவித்த படக்குழுவினர், இது பெண்களின் மன உறுதி, தைரியம் மற்றும் தடைகளைத் தாண்டி முன்னேறும் அவர்களின் திறமைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட படைப்பு என்று குறிப்பிட்டுள்ளனர். ஒடியா சினிமா தற்போது தேசிய அளவில் கவனம் பெற்று வரும் நிலையில், 'பகுனி' திரைப்படம் உலகத் தரத்திலான கதையம்சத்துடன் ஒடியா திரைப்படங்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கும் என்று நடிகர் சப்யசாச்சி மிஸ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.









