ரூ.11,000 கோடி முதலீட்டு ஒப்பந்தம்: முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

ரூ.11,000 கோடி முதலீட்டு ஒப்பந்தத்திற்காக லண்டன் சென்ற முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் பயணத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் சி.ஜோசப் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் மூலம் சுமார் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய ஏன் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கேள்வியை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன.
அதிமுகவின் கேள்வி மற்றும் அரசின் விளக்கம் இந்த விவகாரம் குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சம்வர்தனா மதர்சன் நிறுவனம் 1986-ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டு, நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு நிறுவனம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் வரிப்பணத்தில் முதல்வர் லண்டன் சென்றதற்கான அவசியம் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பு, அந்த நிறுவனம் இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டிருந்தாலும், இந்த முதலீட்டில் அதன் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டு நிறுவனங்களின் பங்கு முக்கியமானது என்றும், உலகளாவிய தொழில்நுட்ப ஒத்துழைப்பை உறுதி செய்யவே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
திமுக மற்றும் பாஜகவின் விமர்சனங்கள் அரசின் இந்த செயல்பாட்டை திமுகவும் கடுமையாகச் சாடியுள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்த்ததாகக் கூறும் அரசின் கூற்று விமர்சிக்கப்பட்டுள்ளது. முதல்வர் லண்டன் சென்றது முதலீடுகளை ஈர்க்க அல்ல, கார் பந்தயத்தைப் பார்ப்பதற்காகத்தான் என திமுக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தமிழ்நாட்டின் புதிய முதலீட்டு முன்மொழிவுகள் சுமார் 74.5 சதவீதம் சரிந்துள்ளதாகவும், தொழில்துறை நிறுவனங்கள் ஆந்திர மாநிலத்தை நோக்கி படையெடுப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் களத்தில் எழுந்த சர்ச்சை தொழில் வளர்ச்சி சரிவடைந்துள்ளதாகக் கூறி வரும் நிலையில், அரசின் இந்த முதலீட்டு ஈர்ப்பு நடவடிக்கைகள் வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே என பாஜக மாநிலத் தலைமைத் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். குறிப்பாக, லண்டன் பயணம் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி போன்ற திட்டங்கள் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான இந்த மோதல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









